மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் மகாராஷ்டிர எம்.பி. ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண் மருத்துவர் எழுதியுள்ள 4 பக்க கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். 3 நாட்களுக்கு முன்பு பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று சதாரா மாவட்ட போலீஸ் எஸ்.பி. தோஷி கூறியதாவது: பால்டன் தாலுகாவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேரில் வீட்டு உரிமையாளர் பிரசாந்த் பங்கரை கைது செய்துள்ளோம். சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானேவை தேடி வருகிறோம்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக பிரசாந்த் பங்கருக்கு, பெண் மருத்துவர் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் 4 பக்க தற்கொலைக் கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் போலீஸார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீஸார் கண்டறிந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில், காவல் துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் 2 உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.
எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீஸார் இதுவரை வெளியிடவில்லை.
மேலும், உதவி ஆய்வாளர் கோபால் பதானே, பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தததையும் உறுதி செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர், கடந்த ஜூன் 19-ம் தேதி பால்டன் துணை காவல் கண்காணிப்பாளரை (டிஎஸ்பி) சந்தித்து, 3 போலீஸ் அதிகாரிகள் மீது புகார் அளித்திருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் எம்.பி. ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் அப்போதே புகார்கள் எழுந்தன. தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைக் குறிப்பில் உள்ள எம்.பி. யார் என்பது தொடர்பாக தற்போது போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.