கர்னூல்: கர்னூலில் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 400 செல்போன் பேட்டரிகள் வெடித்து சிதறியதும் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேக்கூரு கிராமம் அருகே நேற்று முன்தினம் அகிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது, பேருந்து மோதியதில் பைக்கில் இருந்தவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், பைக் பேருந்தின் அடியில் சிக்கி சுமார் 350 மீட்டர் வரை டிரைவர் ஓட்டிச் சென்றதால் பைக் டேங்கில் இருந்த பெட்ரோல் முதலில் தீப்பிடித்துள்ளது.
அதன் பின்னர் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், கீழே இறங்கி பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளார். தீ அணைக்கும் கருவி கூட பேருந்தில் இல்லை. சற்று நேரத்திலேயே தீ மளமளவென பரவியதும் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை உஷார் செய்து இறக்காமல் பேருந்து ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இந்நிலையில், பேருந்தில் லக்கேஜ் வைக்கும் கார்கோ பகுதியில்
400-க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஒரு பெட்டியில் இருந்துள்ளது.
கார்கோ பெட்டியில் பரவிய தீயில் செல்போன் பேட்டரிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளன. இதுவும் தீ வேகமாக பரவுவதற்கு காரணம் என்று தடயவியல் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இதில் தீ மேலும் பரவி பேருந்தின் டேங்கருக்கு சென்று டேங்கரும் வெடித்துள்ளது. இதனால்தான் மிக விரைவாக தீ பேருந்தில் பரவியுள்ளது.
மேலும், பைபரால் பேருந்து பாடி கட்டுவதால் தீப்பிடிக்கும் போது மிக விரைவாக பற்றிக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் பேருந்துக்குள் ஏசி, மெத்தைகள், ஜன்னல் திரைச்சீலைகள் போன்றவையும் தீ எளிதில் பரவ காரணமாக உள்ளன.
போதையில் பைக் ஓட்டிய இளைஞரின் சிசிடிவி காட்சி: பைக்கில் அடிபட்டு உயிரிழந்த சிவசங்கர் (24) குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில், சிவசங்கர் ஒரு பெட்ரோல் பங்க்குக்கு அதிகாலை 2.30 மணிக்கு செல்கிறார். அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் சிறிது நேரத்தில் சென்று விடுகிறார்.
பைக்கில் இருந்து இறங்கிய சிவசங்கர் பெட்ரோல் போட யாரும் இல்லாததால் சத்தம் போடுகிறார். பின்னர் பைக்கை எடுத்துக் கொண்டு குடிபோதையில் தள்ளாடியபடி ஓட்டிச் செல்கிறார்.
இதனால் அவருடைய உடல் உறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தவிர பேருந்து விபத்தில் சதி திட்டம் இருக்குமா என்றும் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.