சென்னை: “நதிகள் புனரமைப்பு மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புள்ள பிரச்சனை. ஆகவே மத்திய, மாநில அரசுகள் முழு முனைப்புடன் நதிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது பருவமழைகள் முறையாக பெய்து வருகின்றன. இதன் காரணமாக பல அணைகள் நிரம்பி உபரிநீர் நதிகளில் வெளியேற்றப்படுகின்றன. வெளியேற்றப்படுகின்ற உபரிநீரை முழுமையாக விளைநிலங்களுக்கு சென்று சேமிக்க போதிய வழிகள் இன்றி பெரும்பாலான உபரிநீர் நதிகள் வழியாக கடலில் சென்று கலக்கின்றன.
இதற்கு நதிகளில் முழுமையான புனரமைப்பு மேற்கொள்ளாததும். முறையான திட்டமிடலும் இல்லாததே காரணம். நதிகளில் முறையான புனரமைப்பு இருக்கும் பட்சத்தில் இந்த நதிகளில் வருகின்ற நீர் கால்வாய்கள் மூலம் நீர்பாசன பகுதிகளில் முறையாக சேமிக்கப்படும். இந்த நீரை வறட்சி காலத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வேளாண்மையை பெருக்க முடியும். குடிநீருக்கும் வழிவகுக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
ஆனால் தற்போது பல இடங்களில் நதிகளுக்கும், கால்வாய்களுக்கும் இடையே முறையான சரியான புனரமைப்பு இல்லாத காரணத்தினால் அதிகப்படியாக நதிகளில் நீர் தேக்கி வைக்க முடியாமல் நதியில் வருகின்ற நீர் கடலில் சென்று கலக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
தமிழக அரசு தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பை உருவாக்கி இந்த அமைப்பின் மூலம் சென்னையில் உள்ள கூவம், அடையாறு போன்ற நதிகளை புனரமைப்பு பணிகளை மேற்கொள்கின்றன. இதற்கு மத்திய அரசு உதவிகள் செய்து வருகிறது. இந்த அமைப்பைக் கொண்டு சென்னை நதிகளை தாண்டி தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நதிகளை புனரமைக்க நவீன மயமாக்கல் முறையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளபட வேண்டும். இது மட்டும் இன்றி தமிழகத்தில் வறட்சி பகுதிகளுக்கு நதிநீரைக் கொண்டு செல்ல கால்வாய்கள் மூலம் நதிகள் உடன் இணைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல தமிழகத்தில் பாய்கின்ற நதிகளில் மாசுகளை கட்டுப்படுத்த கழிவுநீர் கலக்கும் இடங்களை கண்டு அறிந்து சுத்திகரிப்பு மேலாண்மை திட்டங்களை உருவாக்கி கழிவு நீர் நதிகளில் கலக்காத வண்ணம் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வடிகால்களை சுத்திகரித்தல் அவசியம். மேலும், நதிகளில் மாசுகளை கண்டறிய மதிப்பிடல், கண்காணிப்பு போன்ற திட்டங்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும்.
பல நகர பகுதிகளில் செல்லும் நதிகளில் கழிவுநீர் கலந்து பாக்டீரியாக்களின் அளவு பல மடங்கு கூட்டி நச்சுத்தன்மை கொண்ட நதி நீராக மாற்றியுள்ளன. இவைகளையும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை கவனத்தில் கொண்டு நதிகளில் பாக்டீரியாக்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் இருந்து நதிகளில் வெளியேறுகின்ற நீரின் மாசு அளவுகளை முறையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தொழில் ஆய்வக துறை ஆய்வு செய்து தூய நன்நீரை தொழிற்சாலைகள் நதிகளில் வெளியேற்ற வழி வகை செய்ய வேண்டும். இதனால் நதிகளில் ஏற்படுகின்ற மாசு குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நதிகளில் கழிவுகளை கலப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல இடங்களில் நதிகளை ஒட்டிய புதிய நகரங்கள் ஏற்படும் போது நதிகள் மாசுபடாத வண்ணம் கவனத்தில் கொண்டு அதற்கான நகரதிட்டங்களை உருவாக வேண்டும்.
நதிகள் புனரமைக்கப்பட நகரப் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு அவை முறையாக இயக்கப்பட வேண்டும். முக்கியமாக கழிவு நீர் அமைப்பின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அறிமுகபடுத்திட மாநகராட்சிகள், நகராட்சிகள் திட்டமிட வேண்டும்.
நதிகளின் ஓரங்களில் அரிப்பு தன்மையை போக்கவும், நீரை நன்னீராக மாற்றவும், இயற்கை சூழலை உருவாக்கவும் கரை ஓரங்களில் பனை மர வகைகளை வளர்த்திட வேண்டும். நதிகள் புனரமைப்பு மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்பு உள்ள பிரச்சனை. ஆகவே இதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு முழு முனைப்புடன் நதிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.