இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் முதலில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தனர். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் குறிப்பாக 2027 உலகக் கோப்பை வரை தொடர விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
Add Zee News as a Preferred Source
ஆனால் ஒருநாள் உலகக் கோப்பையின் போது இருவரும் 40 வயதை நெருங்கி வருவதால், அவர்களின் அணி இருப்பு சந்தேகத்திற்குறியதாக மாறி இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் அதுவரை அவர்கள் இருவரையும் வைத்திருக்குமா என்ற கேள்வி எழும்பி உள்ளது. அதே சமயம் அவர்கள் 2027 உலகக் கோப்பை வரை அணியில் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற அழுத்தம் நிர்வாகத்தின் வாயிலாக அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சர்வதேச ஒருநாள் போட்டிகள் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது முடிந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். விராட் கோலி முதல் இரண்டு போட்டியில் டக் அவுட் ஆனாலும், மூன்றாவது போட்டியில் அரை சதம் கடந்து பழைய ஃபார்மிற்கு திரும்பினார். மறுபுறம் ரோகித் சர்மா முதல் போட்டியில் ஒற்றை இலக்கு ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் 2வது போட்டியில் அரைசதமும் 3வது போட்டியில் சதமும் விளாசி தான் யார் என்பதை நிருபித்தார்.
ஆஸ்திரேலியா தொடருக்கு பின்னர் இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்றால், முன்பாக விஜய் ஹசாரே தொடரில் விளையாட வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பதில் அளித்துள்ளார்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது குறித்த இதுவரை ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆஸ்திரேலியா தொடர் தற்போதுதான் முடிந்துள்ளது. அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கு பெரிதாக இடைவெளி கிடையாது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடர் முடிந்த பின்னர் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டுமா என்ற ஆலோசனை செய்யப்படும் என சுப்மன் கில் கூறினார்.
About the Author
R Balaji