புதுடெல்லி: அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் எச்1பி விசா கட்டணம் அண்மையில் ரூ.88 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. விசா கட்டண உயர்வு உட்பட பல்வேறு வகைகளில் அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். மேலும் அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் இன்ஸ்டிடியூட் அமைப்பின் ஆராய்ச்சியாளர் டேனியல் டி மார்டினோ வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘‘அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் குறித்து சில முட்டாள்கள் எதிர்மறையாக கருத்துகளை கூறி வருகின்றனர். என்னுடைய ஆய்வின்படி இந்திய வம்சாவளியினரால் அமெரிக்காவுக்கு அதிக நன்மை கிடைத்திருக்கிறது’’ என்றார்.
இந்த பதிவை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு வேம்பு வெளியிட்ட பதிவில், ‘‘இந்திய வம்சாவளியினர் வசிக்கும் நாடுகளின் வளர்ச்சிக்காக, அவர்கள் அதிக நிதி பங்களிப்பை வழங்கி உள்ளனர். இது டேனியல் டி மார்டினோவின் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இந்திய வம்சாவளியினருக்கு ஓர் அழைப்பை விடுக்கிறேன். ஒரு நாடு உங்களை வரவேற்கவில்லை என்றால் அந்த நாட்டில் நீங்கள் ஏன் வாழ வேண்டும். பாரத மாதா உங்களை அழைக்கிறாள். உங்களை வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறாள். வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தாயகத்துக்கு திரும்ப வேண்டும். நாம் ஒன்றிணைந்து மிக வலுவான, வளமான இந்தியாவை கட்டி எழுப்புவோம்’’ என்றார்.
இந்த பதிவின் மூலம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.