புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்தியாவின் தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடைமுறையின்படி, புதிய தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி மத்திய சட்ட அமைச்சகம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதும். இதன்மூலம், புதிய தலைமை நீதிபதி நியமனத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கும். மத்திய சட்ட அமைச்சக கடிதத்தின் அடிப்படையில், தனக்கு அடுத்த 2-வது நிலையில் உள்ள மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதியை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு தலைமை நீதிபதி பரிந்துரைப்பார்.
வழக்கமாக இந்த நடைமுறை பணியில் உள்ள தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதம் முன்பாக தொடங்கும். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நவம்பர் 24-ம் தேதி ஓய்வு பெற உள்ளதால், தற்போது புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடைமுறை தொடங்கி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அவர் நவம்பர் 24-ம் தேதி 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஹரியானா மாநிலத்தின் ஹிசார் நகரில் 1962-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி பிறந்தவர். சொந்த ஊரில் பட்டப்படிப்பை முடித்த சூர்ய காந்த், 1984-ல் ரோத்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சியைத் தொடங்கிய சூர்ய காந்த், 1985-ம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
அரசியலமைப்பு, சேவை, சிவில் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சூர்ய காந்த், பல பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
2000-ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஹரியானாவின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்ட சூர்ய காந்த், 2001ல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2004, ஜனவரி 9ம் தேதி பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சூர்ய காந்த், 2018ல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். 2019, மே 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சூர்ய காந்த், 2027, பிப்ரவரி 9-ம் தேதி ஓய்வு பெறுவார்.