பெங்களூரு,
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் கோடகல் கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா. இவரது மகள் சவுஜன்யா (வயது 17). இவர், கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. படித்து வந்தார். கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சவுஜன்யா அதன் பின்னர் திரும்பி வரவில்லை. தனது மகளை சரணப்பா கிராமம் முழுவதும் தேடியும், விசாரித்தும் பார்த்தார். ஆனால் சவுஜன்யாவை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை காணவில்லை என்று கூறி கடந்த 24-ந் தேதி கோடகல் போலீசில் சரணப்பா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுஜன்யாவை தேடிவந்தனர்.
இதற்கிடையே, சகாபுராவில் உள்ள கிருஷ்ணா ஆற்று கால்வாயில் சவுஜன்யா பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது காணாமல் போன சவுஜன்யா தான் என்பதை உறுதி செய்தார்கள். மகளின் உடலை பார்த்து சரணப்பா, அவரது மனைவி கதறி அழுதார்கள். மேலும் தனது மகளை ராகேஷ், பாண்டா, சிரு ஆகிய 3 பேரும் கடத்தி கொலை செய்திருப்பதாக சரணப்பா கூறினார்.
மேலும் கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கோடகல் போலீஸ் இன்ஸ்பெக்டருடன், மாணவியின் உறவினர்கள் வாக்குவாதம் செய்ததுடன், ஜீப்பை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவி தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.