தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் தேர்வு: அன்புமணி முன்வைக்கும் கோரிக்கை!

சென்னை: தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 16 உடன் முடிவடையும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தான் புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் நவம்பர் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சமூகநீதியை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆணையம், சமூகநீதியை படுகொலை செய்யும் அரசின் சதிகளுக்கு துணை போனதையும், கொடுக்கப்பட்ட கடமைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாததும் அதன் தோல்வியை மட்டுமின்றி துரோகத்தன்மையையும் காட்டுகிறது. இத்தகைய தன்மை கொண்ட சமூகநீதியின் எதிரிகளுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள ஆணையத்தில் கண்டிப்பாக இடமளிக்கக்கூடாது.

மண்டல் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 16(4), 340 ஆகியவற்றின்படி, 1993-ம் ஆண்டு முதல் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவது தான் இந்த ஆணையங்களின் கடமையாகும்.

தமிழ்நாட்டில் நீதியரசர் தணிகாசலம் தலைமையிலான ஆணையம் பதவி விலகியதையடுத்து, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வீ.பாரதிதாசன் தலைமையில் புதிய ஆணையம் 17.11.2022 ஆம் நாள் அமைக்கப்பட்டது.

ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நால்வர் உள்ளிட்ட 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆணையத்திற்கு மொத்தம் 6 பணி வரம்புகளும், ஒரு கூடுதல் பணி வரம்பும் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் இந்த ஆணையம் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்த்தல் அல்லது நீக்குதல், இந்த பட்டியல்களை மாற்றியமைத்தல் ஆகியவை ஆணையத்தின் முதல் இரு பணிகள் ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள ஒரு சாதிப் பிரிவை இரண்டாக பிரித்ததைத் தவிர ஆணையம் எதையும் செய்யவில்லை.

சமூக, கல்வி பின்தங்கிய நிலையின் அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை மேம்படுத்துதல் என்ற மூன்றாம் கடமையை நிறைவேற்றவும் ஆணையம் முயற்சி கூட செய்யவில்லை.

இவை அனைத்தையும் விட வன்னியர்களின் சமூக, கல்வி நிலை குறித்த தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனடிப்படையில் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்கும்படி வழங்கப்பட்ட கூடுதல் பணிவரம்பை நிறைவேற்றுவதில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காட்டிய அலட்சியமும், செய்த துரோகமும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மன்னிக்கக்கூடாதவை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி 10 மாதங்கள் கழித்து 12.01.2023 ஆம் நாள் தான் வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரை அளிக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது.

ஆணையம் நினைத்திருந்தால், அரசால் வழங்கப்பட்ட 3 மாத காலக்கெடுவுக்குள் தரவுகளைத் திரட்டி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைத்திருக்க முடியும். ஆனால், அதன்பின் 1020 நாள்களாகியும் இன்று வரை ஆணையம் துரும்பைக் கூட அசைக்கவில்லை.

வன்னிய மக்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்ட தங்களிடம் கட்டமைப்பு இல்லை என்று கூறி, அந்தப் பொறுப்பை அரசிடமே ஒப்படைத்த ஆணையம், சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் இல்லை என்றும், அவற்றை சேகரிக்க அவகாசம் வேண்டும் என்று கோரி ஆறாவது முறையாக காலநீட்டிப்பு பெற்றுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

உண்மையில், தமிழ்நாடு அரசு அளித்துள்ள ஐந்தாவது பணிவரம்பின்படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினரின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்கு தேவையான பொருத்தமான, நிகழ்கால தரவுகளைத் திரட்டுவதற்காக சுதந்திரமான கணக்கெடுப்புகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேற்கொள்ள முடியும். அதை செய்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அந்தக் கடமையை ஆணையம் செய்யவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பது தான் இந்த ஆணையத்தின் நான்காம் கடமையாகும். அதை நிறைவேற்றுவதிலும் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது. இதன்மூலம் தங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த 15&க்கும் மேற்பட்ட சமூகங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கடந்த மூன்றாண்டு கால செயல்பாடுகளை ஆய்வு செய்தால், சொல்லிக்கொள்ளும்படியாக எதையும் செய்யவில்லை. இன்னும் கேட்டால் ஆணையம் செயல்படவே இல்லை. ஏ.என்.சட்டநாதன், ஜே.ஏ.அம்பாசங்கர், கே.எம்.நடராஜன், எம்.எஸ்.ஜனார்த்தனம் போன்றவர்கள் தலைவர்களாக இருந்த போது தலைநிமிர்ந்து நின்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இப்போது சமூகநீதியை பலி கொடுத்து விட்டு தலைகுனித்து நிற்கிறது.

கடந்த காலங்களில் ஆணையத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் சமூகநீதியைக் காக்க வேண்டும் என்பதற்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்து, ஆணையத்தின் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். ஆனால், ஆணையத்தின் இப்போதைய தலைமை, இந்தப் பணியை பகுதி நேர பொழுதுபோக்காகவே கருதுகிறது. சமூகநீதி தேவைப்படும் மக்களை திருப்திபடுத்துவதற்கு பதிலாக ஆட்சியாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதையே ஆணையம் செய்தது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட ஆணையம் ஆகும். சுதந்திரமாக சமூகநீதிக் கடமையாற்றும் அதிகாரம் அதற்கு உண்டு. ஆனால், அந்த அதிகாரத்தை பயன்படுத்தாத ஆணையத்தின் தலைமை, வன்னியர்கள் உள்ளிட்ட சமூகங்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் சமூக அநீதி சதிவலை பின்னுவதற்கான ஊசியாகவே பயன்பட்டது.

இந்தத் தலைமையோ, உறுப்பினர்களோ இருந்தால் தமிழ்நாட்டில் சமூகநீதி மீண்டும் மீண்டும் சிலுவையில் அறையப்படுமே தவிர, எந்த சமூகத்திற்கும் சமூகநீதி கிடைக்காது. மிகவும் வருத்தத்துடனும், வேதனையுடனும் இந்த குற்றச்சாட்டை பதிவு செய்கிறேன்.

தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய ஆணையத்தை அமைக்கும் போது, அதில், கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகநீதியை படுகொலை செய்வதர்களுக்கு இடமளிக்கக்கூடாது. மாறாக, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தான் புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.