பாரதிராஜா, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத டிரெண்ட் செட்டர். முதல் படமான 16 வயதினிலே படம் முதல் தொடர்ந்து ஐந்து சில்வர் ஜூப்ளி திரைப் படங்களை கொடுத்தவர்.
அவரது இந்த சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தமிழ் சினிமாவின் கடந்த சில வாரங்களாகவே பாரதிராஜாவுக்கு பழசெல்லாம் மறந்து போச்சு… ஏதோ நினைவில் இருக்கிறார்… என்று ஆதாரம் இல்லாத செய்திகள் பறந்து கொண்டு இருக்கிறது. சரி உண்மையில் என்னதான் நடக்கிறது என்கிற விசாரணையில் இறங்கினோம்.

சில நாட்களுக்கு முன்பு டைரக்டரின் சினிமா நண்பர் ஒருவர் அவரை சந்தித்து பேசினார். அப்போது அவரோடு நீலாங்கரை கடற்கரை சென்று ஒன்றாக அமர்ந்து பழைய விஷயங்களை பேசிக் கொண்டு இருந்தார்.
நேற்று கூட பாரதிராஜாவின் தெருங்கிய நண்பர் ஒருவர் தேனியில் இருந்து வந்தார். அவரிடம் டைரக்டர் மனம் திறந்து பேசினார் என்று தினசரி அவரை சந்திக்கும் ஒருவர் நம்மிடம் தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.
ஏற்கெனவே மகன் மனோஜ் குமாரை இழந்து தவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் டைரக்டரிடம் நெருங்கி பழகிவரும் சிலரே இது மாதிரி புரளியை கிளப்பி விடுவது வேதனையாக இருக்கிறது என்று புலம்புகிறார்கள்.
அம்மா, அப்பாவுக்கு பெரிய தண்டனை
சமீபத்தில் டைரக்டரை அவரது வீட்டில் சந்தித்த நடிகை ராதாவிடம் பேசினோம்.
“எங்க டைரக்டரை அவரோட நீலாங்கரை வீட்டுல சந்திச்சேன். நான் நடிக்கிற காலத்தில் மனோஜ் ஊட்டியில் படித்துக் கொண்டு இருந்தார். அம்மா, அப்பாவுக்கு கடைசி காலத்துல பெரிய தண்டனையை கொடுத்துட்டு போயிட்டார்.
மனோஜ் பத்தி பேசி அவரோட சோகத்தை கிளறவில்லை. அவரை அப்படியே முன்னாடி இருந்த ஆக்டிவான டைரக்டராக மாத்த முயற்சி செய்தேன்.

பழைய காலத்தில் ஷுட்டிங் ஸ்பாட்ல நடந்த சுவாரசியமான விஷயங்களை பேசினேன். அவரும் எப்போதும் போலவே இயல்பாகவே பேசினார். நான் நடித்தபோது ஏற்பட்ட சம்பவங்களை அப்படியே ஞாபகமாக சொல்லி என்னை ஆச்சர்யபடுத்தினார். ராதிகா, ரேவதி டைரக்டரை பார்த்து நலம் விசாரித்து விட்டு போனதாக சொன்னார்கள். எங்க டைரக்டர் எப்போதும் போலவே கம்பீரம் குறையாமல் நிறைவான நினைவுகளோடு இருக்கிறார்” என்று நெகிழ்ந்து போய் சொன்னார
பாரதிராஜா குறித்து நம்மிடம் பேசிய அவரது நெருங்கிய சகா, மனோஜ் இழப்பு டைரக்டரை நிலைகுலைய வைத்திருப்பது என்னவோ உண்மைதான். தனக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டிய மகனுக்கு, தானே செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை வந்து விட்டதென்று அவர் புலம்பாத நாளே இல்லை. அதற்காக தன்னிலை மறக்கும் நிலைக்கு ஆளாகவில்லை. மனத் தெளிவோடு இருக்கிறார். ராதிகாவின் தாயார் மறைந்த சேதி கேட்டு ரொம்பவும் வருத்தப்பட்டார். சமீபத்தில் ராதிகா வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு வந்தார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.