ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால், அவருக்கு உள் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source
கேட்ச்சால் விளைந்த விபரீதம்
ஆஸ்திரேயாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, ஹர்ஷித் ராணா வீசிய பந்தில், அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, மிக கடினமான ஒரு கேட்ச்சாக பிடித்து, ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தினார். ஆனால், அந்த கேட்ச்சை பிடித்த வேகத்தில் அவர் தனது உடலை சமநிலைப்படுத்த முடியாமல், இடது பக்க விலா எலும்பு தரையில் பலமாக இடிக்கும் வகையில் கீழே விழுந்தார். வலியால் துடித்த அவர், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆரம்பத்தில், இது ஒரு சாதாரண ஜெர்க் காயமாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவருக்கு உள் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
ஸ்ரேயாஸ் ஐயரின் காயம், இந்திய அணி நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த அதிர்ச்சி தகவல் வெளியானதிலிருந்து, சமூக வலைதளங்களில், கிரிக்கெட் ரசிகர்கள், ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கத் தொடரில் இருந்து முழுமையாக விலகல்?
இந்த காயம் காரணமாக, வரும் நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் முழுமையாக குணமடைய சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம் என்று அஞ்சப்படுகிறது. அவருக்கு பதில் இளம் வீரர் திலக் வர்மா அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியின் மிடில் ஆர்டரின் நம்பிக்கையாகவும், எதிர்கால தூணாகவும் பார்க்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம், அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
About the Author
RK Spark