ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணி தொடரை இழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அணி நிர்வாகத்தின் மீது விமர்சனங்களையும் எழுப்பியுள்ளன. இதற்கு அணி தேர்வும், சரியான வீரர்களை எடுக்காததும் முக்கிய காரணமாக பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது வழக்கமான பாணியில், ஒரு அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். அது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source

கவுதம் கம்பீர் பேச்சு
ஒருநாள் தொடர் தோல்விக்கு பிறகு தனது பயிற்சி அணுகுமுறை குறித்து பேசிய கௌதம் கம்பீர், “எனது நோக்கம், இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர் என்ற பட்டத்தை பெறுவது அல்ல. அதற்காக நான் இங்கு வரவில்லை. எனது ஒரே இலக்கு இந்த இந்திய அணியை, உலகின் மிகவும் வெற்றிகரமான, அச்சமற்ற அணியாக மாற்றுவதுதான்” என்று தீர்க்கமாக தெரிவித்துள்ளார். பொதுவாக, ஒரு தொடர் தோல்விக்கு பிறகு, பயிற்சியாளர்கள் தற்காப்பு ரீதியிலான அல்லது சமாதானப்படுத்தும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால், கம்பீரின் இந்த நேர்மையான வெளிப்படையான பேச்சு அவரது நோக்கத்தை தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.
தோல்வி ஒரு பொருட்டல்ல
கம்பீர் மேலும் பேசியபோது, “ஒரு சில இருதரப்பு தொடர்களில் வெற்றி பெறுவதோ அல்லது எனது தனிப்பட்ட வெற்றி-தோல்வி கணக்கை அதிகரிப்பதோ எனது லட்சியம் அல்ல. ஐசிசி கோப்பைகளை வெல்லக்கூடிய, எந்த சூழ்நிலையிலும், எந்த அணிக்கு எதிராகவும், அச்சமின்றி விளையாடக்கூடிய ஒரு அணியை உருவாக்குவதே எனது பிரதான பணி. அந்த பயணத்தில் இது போன்ற தோல்விகள் சகஜம்” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து வீரர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கையையும், சுதந்திரத்தையும் அளிப்பதாக பார்க்கப்படுகிறது. “தோல்வி குறித்த பயமின்றி, உங்கள் இயல்பான, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என்பதே, கம்பீர் தனது வீரர்களுக்கு தரும் செய்தியாகும். இது ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து, அந்த அணியின் மனநிலையையே மாற்றி, கோப்பையை வெல்ல வைத்த அவரது அணுகுமுறையை நினைவுபடுத்துகிறது.
நீண்டகால பார்வை
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை மனதில் வைத்து, ஒரு புதிய, வலிமையான அணியை கட்டமைக்கும் பணியில் கம்பீர் ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தில், சரியான அணி கலவையை கண்டறியவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவும், சில சோதனைகளை செய்ய வேண்டியது அவசியம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடர் தோல்வியை, அந்த நீண்டகால பார்வையின் ஒரு படியாகவே கம்பீர் கருதுகிறார். ஒரு பயிற்சியாளராகத் தனது பெயரை நிலைநிறுத்துவதை விட, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறைக்கு, ஒரு வலுவான, அச்சமற்ற, உலகை ஆளக்கூடிய ஒரு அணியை விட்டு செல்ல வேண்டும் என்பதே கம்பீரின் உண்மையான விருப்பம்.
இந்த தோல்வி, தற்காலிகமானது; ஆனால், இதன் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்கள், எதிர்காலத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றிகளை தேடித் தரும் ஒரு அஸ்திவாரமாக அமையும் என்பதே கம்பீரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். கம்பீரின் இந்த கம்பீரமான வார்த்தைகள், இந்திய அணிக்குள் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இது, வெறும் வார்த்தைகளாக இல்லாமல், செயலில் வெளிப்படும்போது, இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் மீண்டும் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை.
About the Author
RK Spark