ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவரை கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார். வழக்கறிஞரான இவர் விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் சங்க பொருளாளராக உள்ளார். சதீஷ்குமார் குடும்பம் குறித்து கோட்டைபட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டார்.

இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்வதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட முத்துகிருஷ்ணன் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், மருத்துவர் சிறையில் அடைப்பதற்கான உடற்தகுதி சான்று அளிக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன் வழக்கறிஞர் குறித்து அவதூறாக பதிவிட்ட வரை கைது செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.