சென்னை: துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலைவர் கே.எம்.சுந்தரம் முயற்சியால் தமிழகம் கொண்டுவரப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த இளைஞரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் பாஜகவினர் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மணிவலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(33). இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. மாரிமுத்து துபாயில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரது உடலை துபாயிலிருந்து தமிழகம் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால், போதிய உதவிகள் கிடைக்காமல் அவர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், இந்த தகவல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலைவர் கே.எம்.சுந்தரத்தின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, அயலக தமிழர் பிரிவு மாநிலச் செயலாளரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த எல்.அன்பழகன், மாவட்டத் தலைவர் என்.கே.கோபால் மற்றும் பாஜக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, உயிரிழந்த இளைஞரின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை கே.எம்.சுந்தரம் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக, மத்திய அரசு மூலம் துபாயில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் பேசி, மாரிமுத்துவின் உடலை துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 23-ம் தேதி திருச்சி கொண்டு வந்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம், மாரிமுத்துவின் சொந்த ஊருக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான முழு செலவையும் பாஜக அயலக தமிழர் பிரிவே ஏற்றுக்கொண்டது. மேலும், இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றதோடு, அந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.