தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்: தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் அறிக்கையை இன்று தாங்கள் வெளியிட உள்ளதாகக் கூறினார். அதில், மாநிலத்தை முன்னேற்றுவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் திட்டம் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.

“நாங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பதற்கான தேஜஸ்வியின் பிரமாணப் பத்திரத்தை நாங்கள் வெளியிடப் போகிறோம். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும், அவர்களின் திட்டங்கள் என்ன? அவர்களின் தொலைநோக்குப் பார்வை என்ன? பிஹாரை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்லப் போகிறார்கள்? என்பது குறித்து அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

நாங்கள் எங்கள் தொலைநோக்குப் பார்வையை வழங்கியுள்ளோம். பிஹாரை முதல் மாநிலமாக மாற்றுவதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், அவர்கள் எதிர்மறையான விஷயங்களை மட்டுமே பேசுகிறார்கள். எங்கள் தலைவர்களைப் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

பிஹாரின் மிக முக்கிய பண்டிகையான சாத் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பிஹார் மக்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு வருவார்கள் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். சாத் பண்டிகையை முன்னிட்டு 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். ஆனால், பிஹார் மக்கள் ரயில்களில் எப்படி அடைபட்டு வந்தார்கள் என்பதை எல்லோருமே பார்த்தோம். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பயணித்ததைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த சிறப்பு ரயில்கள் என்ன ஆகின? பிஹார் மக்கள் மாற்றத்துக்கான மனநிலையில் இருக்கிறார்கள். நிச்சயம் பிஹாரில் ஆட்சி மாற்றம் நிகழும்” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா கூட்டணிக்கும் இடையேயான போட்டியாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் நடைபெறும் என்று பாஜக அறிவித்துள்ளது. எனினும், முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கூட்டணி வெளியிடவில்லை. தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என பாஜக தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், மகா கூட்டணி தங்கள் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவையும், துணை முதல்வர் வேட்பாளராக விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவர் முகேஷ் சஹானியையும் அறிவித்துள்ளது. 243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹாரில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் நவ.14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.