சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைந்து வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.
இதுகுறித்து துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 2025-26-ம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க அவோன், ஹீரோ சைக்கிள் நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மாணவிகளுக்கு ரூ.4,250 மதிப்பிலும், மாணவர்களுக்கு ரூ.4,375 மதிப்பிலும் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கொள்முதல் ஆணை பெற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சைக்கிள்களை விநியோகிக்க தொடங்க வேண்டும்.
சைக்கிள் வழங்கும் திட்டம் முதல்வரால் தொடங்கிவைத்த பின், அந்தந்த மாவட்டங்களில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். 3 ஆண்டு உத்தரவாத அட்டை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். சைக்கிள்கள் விநியோகம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகு, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறைந்தது 3 நாட்களுக்கு பழுது நீக்குவதற்கான சிறப்பு முகாம் நிறுவனத்தால் நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
