புதுடெல்லி: பிளாஸ்டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ள முன்முயற்சிக்கு மன்கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி வானொலி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்றைய 127-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சூரிய கடவுளுக்கு மரியாதை செலுத்தும் சாத் பூஜை இந்தியாவின் சமூக ஒற்றுமைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு. இந்தியாவின் கலாச்சாரம், இயற்கை மற்றும் சமூகத்தின் ஆழமான ஒற்றுமை ஆகியவற்றை இந்த பண்டிகை பிரதிபலிப்பதாக உள்ளது. இது, சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களையும் ஒன்றிணைக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர்: நமது ராணுவம் ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற வெற்றி நாட்டு மக்களை பெருமையால் நிரப்பியுள்ளது. அதேபோன்று நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அரசின் முயற்சி பாரட்டத்தக்கது. ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் இருள் சூழ்ந்த பகுதிகளில் கூட தற்போது மகிழ்ச்சியின் விளக்குகள் ஒளிவீச தொடங்கியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதுமையான முயற்சியை சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ளது. அதற்காக ‘‘குப்பை கஃபே’’ வை அமைத்துள்ளது. அங்கு குடிமக்கள் உணவுக்காக பிளாஸ்டிக் கழிவுகளை பரிமாறிக் கொள்ளலாம். அம்பிகாபூர் நகராட்சியால் நடத்தப்படும் இந்த கஃபேவில் யாராவது ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவை கொண்டு வந்து தந்தால் மதிய உணவு தரப்படும். அரை கிலோ பிளாஸ்டிக் கழிவை கொண்டு வந்தால் அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். இது, நமது பூமிப்பந்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட மிகச்சிறந்த முன்முயற்சி.
இதேபோன்று, இயற்கையை பாதுகாக்கும் வகையில் அகமதாபாத் அருகே உள்ள தோலேரா கடற்கரை பகுதியில் சதுப்பு நிலத் தோட்டங்களை விரிவுபடுத்தியதற்காக குஜராத் வனத் துறை பணியும் பாராட்டுதலுக்குரியது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பணியால் இன்று தோலேரா கடற்கரையில் மூன்றரை ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சதுப்பு நிலங்கள் பரவியுள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் விடுத்த கோரிக்கையை ஏற்று பிஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் படைகளில் இந்திய நாய் இனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
150-வது பிறந்தநாள்: அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்லபபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. நவீன காலத்தில் நாட்டின் மிச்சிறந்த அறிவாளிகளில் ஒருவர் அவர்.
அதேபோன்று, நவம்பர் 15-ம் தேதி ஜனஜாதிய கவுரவ் திவாஸை ஒட்டி பழங்குடியின தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டின் சுதந்திரத்துக்காகவும், பழங்குடி சமூகத்தின் உரிமைகளுக்காகவும் அவர் செய்த பணி ஈடு இணையற்றவை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
