விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் தீவிரமாக உருவான ‘மோந்தா’ புயல் இன்று மாலை அல்லது இரவு காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதனால், ஒடிசா மற்றும் ஆந்திர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே ரயில்களும், விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: மோந்தா புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட தெற்கு ஒடிசாவை சேர்ந்த மல்கன்கிரி, கோராபுட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரங்பூர், கலஹந்தி மற்றும் காந்தமால் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலைப்பாங்கான பகுதிகளிலிருந்து மக்களை அரசு வெளியேற்றியுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு சேவையின் 140 மீட்புக் குழுக்களை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
ஒடிசாவின் நவரங்பூர், கலஹந்தி, காந்த்மால், நயாகர், கோர்தா மற்றும் பூரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல அங்குல், தேன்கனல், கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திரபாடா, ஜாஜ்பூர், கியோஞ்சர், பத்ரக், பாலாசோர், மயூர்பஞ்ச், சம்பல்பூர், தியோகர், ஜார்சுகுடா, போலாங், புலோராங், பர்கர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 30-ம் தேதி வரை ஒடிசாவில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளனர்.
அலர்ட் நிலையில் ஆந்திரா: மோந்தா புயல் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதேபோல், நந்தியால், கடப்பா மற்றும் அன்னமய்யா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கர்னூல், அனந்தபூர், ஸ்ரீ சத்ய சாய் மற்றும் சித்தூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 242 மருத்துவ முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 283 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு, வெளியேற்றம் மற்றும் வெள்ள மீட்புக்காக பதினொரு தேசிய் பேரிடர் மீட்புப் படை மற்றும் 12 மாநில மீட்புப்படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடலோர மண்டலங்களில் தீயணைப்பு சேவைகள், படகுகள், லைஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் அவசரகால உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
விமானங்கள் ரத்து: மோந்தா புயல் காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 32 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘நாங்கள் தினமும் 30 முதல் 32 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்குகிறோம். இன்று, அந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் என். புருஷோத்தம் தெரிவித்தார்.
இதேபோல், விஜயவாடா விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை உட்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று விஜயவாடா விமான நிலைய இயக்குநர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்தார். இதேபோல், திருப்பதி விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ரயில்கள் ரத்து: பயணிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி விசாகப்பட்டினம் வழியாக செல்லும் 32 ரயில்களை ரத்து செய்வதாக கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்படவிருந்த உள்ளூர் மெமுக்கள் மற்றும் பிற ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு கடற்கரை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தீபக் ரௌத் தெரிவித்தார்.
மேலும், டாடாநகர் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் திருப்பி விடப்பட்டுள்ளது. புவனேஸ்வர் – ஜகதல்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் ரூர்கேலா – ஜகதல்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு ரயில்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
மோந்தா புயல் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தெற்கு மத்திய ரயில்வே சில ரயில்களை முழுமையாகவும், சில ரயில்களை பகுதியளவிலும் ரத்து செய்துள்ளது. ரயில்களின் கால அட்டவணையை மாற்றியமைத்தும் ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பயணிகள் பயணத்திற்கு முன்பு தங்களின் ரயில்களின் நிலையை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் ஆலோசனை: இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் மோந்தா புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.
குறிப்பாக விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் குண்டூர் பிரிவுகளில் கட்டுப்பாட்டு அறைகளை செயல்படுத்துதல், அத்தியாவசிய பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் மனிதவளத்தை தயார் செய்தல், பயணிகள் சிரமத்தைக் குறைக்க ரயில் நடவடிக்கைகளை கண்காணித்தல் போன்ற முக்கிய பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
ஒடிசாவில் 2,048 நிவாரண முகாம்கள்: ‘மோந்தா’ புயலால் பாதிக்கப்படக்கூடிய மக்களை தங்க வைக்க ஒடிசா அரசு 2,000-க்கும் மேற்பட்ட முகாம்களைத் திறந்துள்ளது. ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி, தனது அரசாங்கம் மோந்தா புயலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், எட்டு தெற்கு மாவட்டங்களில் 2,000 க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரண மையங்களைத் திறந்துள்ளதாகவும் தெரிவித்தார். மாநில அரசின் 2,048 பேரிடர் நிவாரண மையங்களுக்கு 11,396 பேர் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.