பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரா (வயது 65). இவர் கடந்த 10-ந்தேதி பத்ராவதி டவுன் பகுதிக்கு சென்றபோது அங்கு உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் அவசர தேவைக்காக பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால், ராமச்சந்திராவுக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியவில்லை. இதனை அருகே நின்ற நபர் பார்த்து தான் பணம் எடுத்து கொடுப்பதாக அவரிடம் கூறியுள்ளார். பின்னர் ராமச்சந்திராவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி பணம் எடுப்பது போல் நடித்து பணம் வரவில்லை என நம்ப வைத்துள்ளார்.
பின்னர், அந்த மர்மநபர் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்துள்ளாா். இதை கவனிக்காத ராமச்சந்திராவும் அது தனது ஏ.டி.எம். கார்டு என நம்பி அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் ராமச்சந்திரா செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரத்து 600 எடுக்கப்பட்டது என இருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ராமச்சந்திரா வங்கிக்கு சென்றபோது தான் ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து ரூ.18 ஆயிரத்து 600-ஐ மர்மநபர் அபேஸ் செய்தது முதியவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து ராமச்சந்திரா பத்ராவதி பழைய டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.