செஞ்சி, சிங்கவரம் ரங்கநாதர் கோயில்: வராஹ ரூபமாய்த் தோன்றி வழிகாட்டிய பேசும் பெருமாள் கோயில்!

மகாவிஷ்ணு, சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் பல தலங்கள் உண்டு. அவற்றுள் முதன்மையானது ஸ்ரீரங்கம் என்றாலும் அதற்கு இணையான பெருமையை உடையது சிங்கவரம். செஞ்சிக்கு அருகில் இருக்கும் இந்தத் தலத்துக்கு விஷ்ணு செஞ்சி என்கிற பெயர் உண்டு. தற்போதைய செஞ்சியை சிவ செஞ்சி என்கின்றன பழம் நூல்கள். அந்த அளவுக்கு விஷ்ணு தலமாக விளங்குகிறது சிங்கவரம். செஞ்சி மாநகரில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் சிறப்புகளைக் காண்போம்.

பல்லவ மன்னன் ஒருவன் வளர்த்த தோட்டத்தைப் பன்றி ஒன்று புகுந்து நாசம் செய்தது. அந்தத் தோட்டம் மன்னன் தினமும் விஷ்ணு பூஜை செய்வதற்குத் தேவையான மலர்களுக்காகப் பராமரிக்கப்பட்டது. ஆனால் மலர்களை இரவே பன்றி புகுந்து நாசம் செய்துவிடுவதால் மன்னன் வருந்தினான். நானே அந்தப் பன்றியை வேட்டையாடுவேன் என்று ஒருநாள் இரவு தோட்டம் புகுந்தான். பன்றியும் வந்தது. அதன் தோற்றமே அவனுக்குப் பெரும் சிலிர்ப்பைத் தந்தது. பகவானின் வராக ரூபம் மனக்கண்ணில் தோன்றியது. இருந்தாலும் சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு அம்பு தொடுத்தான். பன்றி அதிலிருந்து தப்பி ஓடியது.

சிங்கவரம் வரதராஜ பெருமாள்
சிங்கவரம் வரதராஜ பெருமாள்

மன்னன் துரத்திக்கொண்டே சென்றான். பன்றி வேகமாக ஓடி அருகில் இருந்த மலை குகைக்குள் புகுந்துகொண்டது. மன்னனும் பின்னாலேயே ஓடிச் சென்று குகைக்குள் நுழைந்தான். அங்கே அவன் எதிர்பாராத காட்சி காத்திருந்தது.

பிரமாண்ட திருமேனியராக அங்கே ரங்கநாதர் சயனக் கோலத்தில் சேவை சாதித்திருந்தார். மன்னன் வார்த்தைகள் இல்லாமல் கூப்பிய கரங்களோடு அப்படியே சிலைபோல் நின்றுவிட்டான். அங்கே எரிந்துகொண்டிருந்த தீப ஒளியில் ரங்கநாதரின் திருமுகம் ஜொலித்தது. வராஹமாக வந்து வழிகாட்டி என்னை உன் திருவடி தரிசனம் தந்துவிட்டாயே என்று உள்ளூர பகவானிடம் கதறினான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் பெருகியபடி இருந்தது. அப்போது பெருமாள் அசரீரியாக, ‘உனக்கு தரிசனம் தரவே இதுபோன்றதொரு விளையாடலை நடத்தினோம்’ என்று கூற மன்னர் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டான். அதன்பின் தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் பெருமாளை வணங்கி முக்தி பெற்றான்.

இந்த நிகழ்வு, செஞ்சி சிங்காவரம் தலபுராணத்தில் உள்ளது. வாருங்கள் அப்படிப்பட்ட அற்புதமான தலத்தை முதலில் தரிசிப்போம்.

இந்த மலைக்குப் பெயர் சிம்மாசலம். மலையில் சுமார் 160 படிகள் ஏறிச் சென்றால்… பிற்கால கட்டுமானங்களான ஐந்து நிலை கோபுரம் மற்றும் மண்டபங்களுடன் அமைந்திருக்கிறது இந்த ஸ்ரீரங்கநாதர் ஆலயம். ஆலயத்தில் நுழைந்ததும் நாம் ஸ்ரீவரதராஜ பெருமாள் சந்நிதியை தரிசனம் செய்யலாம். அடுத்ததாக ரங்கநாயகி தாயார் சந்நிதி. கருணை ததும்பும் திருமுகம், மலர்கள் மற்றும் அபய- வர அஸ்தம் துலங்கும் திருக்கரங்களுடன், அமர்ந்த கோலத்தில் உள்ள தாயார் சேவை சாதிக்கிறார்.

சிங்கவரம் மலைக்கோயில்
சிங்கவரம் மலைக்கோயில்

தாயார் சந்நிதிக்கு அருகிலேயே சந்திரபுஷ்கரணி. வற்றாத தீர்த்தமாகிய இதிலிருந்துதான் திருமஞ்சனம் மற்றும் திருவாராதனைக்கு நீர் எடுக்கின்றனர். மலைக்கு மேல் லட்சுமி – ராம தீர்த்தங்கள் உள்ளன. சூரிய கிரணங்கள் விழாத சுனை ஒன்றும் உண்டு. தல விருட்சங்களாக நந்தியாவட்டை, எலுமிச்சை. அரச மரமும் உள்ளன. கோயிலின் உள்ளே சிறு மேடையில் ஸ்ரீநிகமாந்த மகாதேசிகரின் சிலாரூபத்தையும் தரிசிக்கலாம்.

குடைவரையாகத் திகழும் கருவறையில் தலையை சற்றே தூக்கியவாறு, வலக்கையை கீழே தொங்கவிட்டு, இடக் கையால் கடக முத்திரை காட்டி ஆதிசேஷன் மீது பள்ளிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர். பெருமாள் பிரமாண்ட மூர்த்தியாக 22 அடி கொண்டு கோயில் கொண்டுள்ளார். பெருமாளை ஒட்டுமொத்தமாக தரிசிப்பது இயலாது; மூன்று பாகங்களாக தரிசிக்கலாம். முதல் நிலையில் – திருமுகம், திருக்கரங்கள், ஆதிசேஷன், கந்தர்வர் மற்றும் திருமகள்; 2-வது பாகத்தில்- பிரம்மா, 3-வது பாகத்தில் – திருவடியின் கீழே பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு மற்றும் அத்ரி முனிவரை தரிசிக்கலாம். மூலவரின் அருகிலேயே ஸ்ரீதேவி- பூதேவியுடன் உற்ஸவர்!

தேசிங்குராஜனும் இந்தப் பெருமாளை வழிபட்டதாகச் சொல்லப்பட்டது. பெருமாளோடு நேருக்கு நேராகப் பேசும் அளவுக்கு பெரும் பக்தி கொண்டவர் தேசிங்குராஜன். ஒருமுறை தேசிங்கு போருக்குப் புறப்பட்டபோது, ‘இன்று போருக்குச் செல்ல வேண்டாம்’ என்று அறிவித்தாராம். ஆனால், தேசிங்குராஜன் பின்வாங்காமல் போருக்குச் செல்ல அந்தப் போரில் மரணம் அடைந்தான் என்கிறது தலபுராணம்.

மலைக்கு மேல், திருமகளை அணைத்தவாறு சேவை சாதிக்கும் ஸ்ரீவராஹரையும் தரிசிக்கலாம்.

அந்நியர்களால் திருவரங்கம்- அரங்கனுக்கு (உற்ஸவர்) ஆபத்து ஏற்பட்டபோது சிலகாலம் அதை இங்கே வைத்துப் பாதுகாத்ததாகவும் வரலாறு உண்டு. இப்படிப் பல விசேஷங்கள் உள்ள இந்தத் தலத்தில் திருவாதிரை, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில்… பெருமாளுக்கு, பால் கலந்த சாதத்தை நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு. இதனால் குழந்தை இல்லாத தம்பதிக்கு விரைவில் புத்திர பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள். மேலும் இந்தப் பெருமாளையும் தாயாரையும் தரிசித்தாலே சகல மங்கலங்களும் நம் வாழ்வில் உண்டாகும் என்பது நம்பிக்கை.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று சிங்கவரம் ரங்கநாதரை தரிசித்து வாருங்கள். வாழ்வில் நலமும் வளமும் உண்டாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.