ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், சதம் அடித்து நான் இன்னும் எங்கும் செல்லவில்லை என்பதை தனது பேட்டால் பதிலளித்து இருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹிட்மேன் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், “2027ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகே, ரோஹித் ஓய்வு பெறுவார்” என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் உறுதிப்படுத்தியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
Add Zee News as a Preferred Source

சதத்தால் விமர்சனங்களுக்கு பதிலடி
சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம், இந்திய அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா, முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால், “ரோஹித்தின் காலம் முடிந்துவிட்டது; அவர் ஓய்வு பெற வேண்டும்” என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், தனது வழக்கமான பாணியில், இந்த விமர்சனங்களுக்கெல்லாம் தனது பேட்டால் பதிலளித்தார் ரோஹித். இரண்டாவது போட்டியில் நிதானமாக ஆ, 73 ரன்கள் குவித்த அவர், சிட்னியில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், தனது கிளாசி ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்து, தனது 33வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் மொத்தமாக 202 ரன்கள் குவித்த அவர், தொடர் நாயகன் விருதையும் வென்று, தன்னை ஒரு சிறந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
2027 உலகக்கோப்பையே இலக்கு
இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரோஹித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட், “ரோஹித் சிறப்பாக விளையாடவில்லை; அவர் ஓய்வு பெற வேண்டும் என்று பலர் பேசி வந்தனர். ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் 73 மற்றும் 121 ரன்கள் அடித்து, நாட்டின் ஒரு சிறந்த வீரர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவரது தன்னம்பிக்கைதான் அவரது ரகசியம். அதனால் தான் அவர் இன்னும் ஓய்வு பெறவில்லை” என்று கூறினார். மேலும், “அவர் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடி, அதன் பிறகே ஓய்வு பெற விரும்புகிறார். அதற்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார்” என்று கூறி, ரோஹித்தின் ஓய்வு குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடைசி ஆட்டம்!
கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா, இதுவே தனது ஆஸ்திரேலிய மண்ணில் கடைசி சர்வதேச ஆட்டம் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். அந்த கடைசி ஆட்டத்தை, விராட் கோலியுடன் இணைந்து ஆடியது அவரது கரியரில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஹர்ஷித் ராணாவின் அபாரமான பந்துவீச்சால் 236 ரன்களுக்கு சுருண்டது. பின்னர், களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் ஆட்டமிழக்காத 121 ரன்கள் மற்றும் விராட் கோலியின் 74 ரன்கள் உதவியுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது, தனது அடுத்த இலக்கை 2027 உலக கோப்பையாக நிர்ணயித்துள்ள ரோஹித் சர்மா, அந்த உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்து, தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை ஒரு வெற்றியுடன் முடிப்பார் என்று ரசிகர்கள் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
About the Author
RK Spark