இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று (அக்டோபர் 28) இரவு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட கடும் வயிற்று அடியால், அவரது மண்ணீரலில் கிழிவு ஏற்பட்டு உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
போட்டி நடந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்து
அக்டோபர் 25 அன்று சிட்னியில் நடைபெற்ற போட்டியில், ஹர்ஷித் ராணா பந்து வீசிய ஓவரில், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர் கடினமான டைவ் ஒன்றை அடித்தார். அந்த நேரத்தில் இடது பக்க விலா எலும்புப் பகுதி தரையில் மோதிக்கொண்டதால் அவருக்கு கடும் வலி ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறிய ஸ்ரேயாஸ், ஓய்வறையில் இருந்தபோது திடீரென சுவாசக்குறைவு மற்றும் நாடித் துடிப்பு குறைவு ஏற்பட்டதால் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்களின் பரிசோதனையில் அவரது மண்ணீரல் கிழிந்து உள் இரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, சிறப்பு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
பிசிசிஐயின் விளக்கம்
பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் உடனடியாகக் கண்டறியப்பட்டு, இரத்த கசிவு நிறுத்தப்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அக்டோபர் 28 அன்று எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவுகள், அவர் குணமடைந்து வருவதை காட்டுகின்றன. அவர் இன்னும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
மேலும், “சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி, பிசிசிஐ மருத்துவக் குழு ஸ்ரேயாஸ் ஐயரின் குணமடைவைக் கண்காணிக்கும்” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிசிசிஐ மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் டின்ஷா பர்திவாலா, “கள மருத்துவக் குழுவினர் அதிவேகமாக செயல்பட்டதால் உயிருக்கு ஆபத்து தவிர்க்கப்பட்டது” என பாராட்டியுள்ளார். ஸ்ரேயாஸ் தற்போது ICU-யிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல்நிலை மேலும் மேம்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரின் குடும்பத்தினர் விரைவில் சிட்னி சென்று அவரைச் சந்திக்க உள்ளனர். மருத்துவ நிபுணர்கள் அவருக்கு முழுமையான ஓய்வு அவசியம் என பரிந்துரைத்துள்ளனர்.
விளையாட்டில் இருந்து இடைவெளி
இந்த காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் சில மாதங்கள் போட்டிகளில் இருந்து விலக வேண்டி வரலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக விளங்கும் ஸ்ரேயாஸ் ஐயரின் இழப்பு அணிக்குச் சவாலாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் சாதகமாக இருந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் மைதானத்துக்குத் திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
About the Author
R Balaji