Dude: "நட்பு – காதல் இடையிலான புரிதலை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்" – திருமாவளவன் பாராட்டு

தீபாவளியை முன்னிட்டு வெளியான `டியூட்’ திரைப்படத்தைப் பார்த்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் படத்தின் இயக்குநரைப் பாராட்டியுள்ளார்.

“Dude – சமூகத்தின் முக்கிய சிக்கலைக் கையாண்டிருக்கிறார்”

செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய அவர், ” காதலை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் ஆணவக் கொலைக்கு எதிராகவும் பேசுகிறது. காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் போன்ற எந்த வரையறையும் தேவையில்லை. இரு மனங்கள் போதும் என்ற வரையறையை முன்னிறுத்தி இந்தத் திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காட்சி அமைப்புகளால் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை திரைப்படத்தின் ஓட்டம் உருவாக்குகிறது. இறுதியாக இது எப்படி போய் முடியும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

நகைச்சுவை ததும்ப, அதே நேரத்தில் சமூகத்தின் மிக முக்கியமான நாள்தோறும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கிற மிகப்பெரிய ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை பிரமாண்டமாக கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். இந்த தலைமுறைக்கு பொருந்தும் வகையில் இந்தத் திரைப்படத்தை அவர் படைத்திருப்பது அவருடைய கலைப்படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது.

“நட்புதான் காதலுக்கு அடிப்படையாக இருக்கிறது”

இந்த தலைமுறைகளின் உளவியலையும் அவர் நல்ல முறையில் உள்வாங்கியிருக்கிறார். அதை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு சான்றாக உள்ளது. ஜென் சி கிட்ஸ் என்று சொல்லக்கூடிய 21ஆம் நூற்றாண்டை சார்ந்தவர்களின் நட்பு – காதல் இரண்டுக்கும் இடையிலான புரிதலையும் மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

நட்பு வேறு காதல் வேறு என்றாலும் காதலுக்கு நட்புதான் அடிப்படையானது ‘பிரண்ட்ஷிப்தான் லவ்’ என்று ஒரு இடத்திலே கதாநாயகருடைய நண்பன் பேசுகிற ஒரு வசனம் இருக்கிறது, ‘இப்ப நான் நட்பா பழகிட்டேன். எந்த பீலிங்கும் எனக்கு இல்ல, ஜீரோ பீலிங் உன்னோட எப்படி நான் வாழ முடியும்?’ அப்படிங்கிற ஒரு இடத்தில் நட்புக்கு மிக உயர்ந்த மரியாதையைத் தருகிறார். அந்த நட்புதான் காதலுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதை அடுத்தடுத்து வரக்கூடிய காட்சியில் பதிவு செய்கிறார்.

இப்படத்தை பிராக்டிகலா, நடைமுறை சாத்தியம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பலாம். ஆனால் இதை ஒரு விவாதமாக்கி இருக்கிறார் அல்லது இதை வெளிச்சப்படுத்தி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.” எனக் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.