IND vs AUS 1st T20: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கான்பெராவின் மனுக்கா ஓவல் மைதானத்தில், இன்று நடைபெற்றது. தொடக்க ஆட்டம் சூப்பராக ஆரம்பித்தாலும், வருண பகவான் போட்டி முழுமையாக நடக்கவிடவில்லை. இப்போட்டியில், ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அதிரடித் தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது, நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 3.5 ஓவர்களில் 35 ரன்கள்.
Add Zee News as a Preferred Source
பின்னர், ஆட்டத்தில் சிறிது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு, ஆட்டம் 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்த இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இணைந்து அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினர். இருவரும் இணைந்து வெறும் 35 பந்துகளில் 62 ரன்கள் குவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். சூர்யகுமார் யாதவ் தனது இன்னிங்ஸின் போது, டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 150 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.
எனினும், இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து, வலுவான நிலையில் இருந்தபோது, மழை மீண்டும் பலமாகப் பெய்யத் தொடங்கியது. பலமுறை ஆடுகளத்தை ஆய்வு செய்த பின்னரும், ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பே இல்லை என நடுவர்கள் முடிவெடுத்து, போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர். அப்போது சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 39 ரன்களுடனும், சுப்மன் கில் 20 பந்துகளில் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்தத் தொடர் தற்போது 0-0 என்ற சமநிலையில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளும் இரு அணி ரசிகர்களுக்கும் நிறைய உற்சாகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த டி20 போட்டி வெள்ளிக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வில் கவனிக்கதக்க ஒருமாற்றம் இருந்தது. குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோரில் யாரேனும் ஒருவர் மட்டுமே இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். அதேநேரத்தில் சர்பிரைஸாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெறாமல் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் இடம்பிடித்திருந்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
About the Author
S.Karthikeyan