நாளந்தா: “1971 வங்கதேச போரின் போது, இந்திரா காந்தி அமெரிக்காவுக்கு அஞ்சவோ, தலைவணங்கவோ இல்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்கொள்ளும் திறமை இல்லை” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறினார்.
பிஹாரின் நாளந்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “1971 வங்கதேசப் போராட்டத்தில், அமெரிக்கா தனது விமானங்களையும் கடற்படையையும் இந்தியாவை மிரட்டவும், அச்சுறுத்தவும் அனுப்பியது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ‘உங்கள் கடற்படைக்கு நாங்கள் பயப்படவில்லை, நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள், நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம்” என்று கூறினார்.
இந்திரா காந்தி ஒரு பெண், ஆனால் பிரதமர் மோடியை விட அவருக்கு அதிக தைரியம் இருந்தது. நரேந்திர மோடி ஒரு கோழை. அவருக்கு அமெரிக்க அதிபரை எதிர்த்து நிற்கும் தொலைநோக்குப் பார்வையோ அல்லது திறனோ இல்லை.
நான் அவருக்கு சவால் விடுகிறேன்: நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்தால், பிஹாரில் நடைபெறும் எந்தக் கூட்டத்திலும், அமெரிக்க அதிபர் பொய் சொல்கிறார் என்றும், அவர் ‘ஆபரேஷன் சிந்தூரை’ நிறுத்தவில்லை என்றும் கூற வேண்டும். அவரால் அதைச் செய்ய முடியாது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நரேந்திர மோடியை 50 முறை அவமதித்துள்ளார். “நான் மோடியிடம் தொலைபேசியில் ‘ஆபரேஷன் சிந்தூரை’ நிறுத்தச் சொன்னேன். நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்குள் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தினார்” என்று ட்ரம்ப் கூறினார்.
ஆனால் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் பொய் சொல்கிறார் என்று சொல்ல தைரியம் இல்லை. நரேந்திர மோடி ட்ரம்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது, ஆனால் அவர் பயத்தால் அவரை சந்திக்கவில்லை, அவர் தலைமறைவாக இருக்கிறார். நரேந்திர மோடிக்கு தைரியம் இல்லை.” என்று கூறினார்.