மதுரை: என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ தான் முடியும் என அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மதுரையில் இன்று தெரிவித்தார்.
மதுரையில் இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாதங்களில் மாவட்டந்தோறும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. பள்ளி அளவில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திமுக அரசின் கண் அசைவு இல்லாமல் போதைப்பொருள் இந்தளவுக்கு புழக்கம் வருவதற்கு வேலை இல்லை. தமிழகத்திலிருந்து திமுக அரசாங்கம் போனால்தான் மக்களுக்கு விடிவுகாலம் வரும்.
தேவர் ஜெயந்தியில் அனைவரையும் சந்திப்பது வழக்கம். அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து தொடர்ந்து சொல்லிக்கொண்டிக்கிறேன். ‘சர்ப்பிரைஸ்’ ஆக எல்லாமே நடக்கும். அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவேன் என்று சொல்கிறேன். அதைப் பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் தான் முடிவு. நான் என்ன செய்கிறேன் என பொறுத்திருந்து பாருங்கள்.
தமிழக அரசின் நகராட்சி துறை பணியாளர்கள் நியமனத்தில் அமலாக்கத்துறை விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. டிஜிபிக்கு கடிதம் கொடுத்தாக சொல்கின்றனர். உண்மையிருந்தால் வெளியில் வந்தாகும். நீங்கள் கவலைப்படாதீர்கள். தொண்டர்களுக்காகத்தான் நான் எல்லாமே செய்துகொண்டிருக்கிறேன். வெற்றிகரமாக முடிப்பேன்.
தமிழகத்தில் மொத்தம் 22 பல்கலைக்கழகத்தில் 14 பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லை. அதுபற்றி முதல்வரிடம் தமிழக ஊடகங்கள் கேள்வி கேட்காமல் வாயடைத்து மவுனமாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை. ஜெயலலிதா கொண்டுவந்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கும் துணைவேந்தர் இல்லை.
நான் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதால் தொண்டர்கள் என்னை வந்து பார்க்கின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 698 ஹெக்டேர் பரப்புடையது, அதை சுற்றி 1 கிமீ தொலைவுக்கு கட்டிடங்கள் இருக்கக்கூடாது என தீர்ப்பாயம் சொல்லியுள்ளது. சென்னைக்கு காப்புக்காடுகள் அவசியம். அதில் அனுமதி கொடுத்தது தவறு. அதனை உணர்ந்து ரத்து செய்தால் நல்லது. சமூக பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும்.
நான் 1987 டிச.25-ம் தேதி எம்ஜிஆர் மறைவில் இருந்து கட்சியை பார்த்து கொண்டிருக்கிறேன். இதபோல் பேசியவர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதிமுகவுக்கு இரண்டாவது முறை பிரச்சினை வந்துள்ளது. இதுவும் சுமூகமாக தீர்க்கப்படும். தமிழக ஊடகங்கள் ஒருதலை பட்சமாக இருப்பதைப்போன்று ஒரு உணர்வு இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் ஆணையத்துக்கு வாக்காளர் சிறப்பு திருத்தம் செய்யும் உரிமை இருக்கிறது. 2006-ல் ஜெயலலிதா ஆட்சியில் ஆறரை லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
அப்போது அவர் தேர்தல் ஆணைய நடைமுறைய ஏற்றுக்கொண்டார். தற்போது திமுக போல் பூதாகரமாக்கவில்லை. 2006 லிருந்து 2011 வரை திமுக ஆட்சியில் இதே வாக்காளர் சிறப்பு திருத்தப்படி 49 லட்சத்து 82 ஆயிரம் பேர் நீக்கினர். பொய் வாக்காளர்களை சேர்ப்பது திமுகவின் பழக்கம். அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள்தான் விழிப்போடு இருக்க வேண்டும். அரசியலில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்யும் பழக்கம் என்னிடம் இல்லை. 1987-லிருந்து என்னைப்பற்றி அறிந்த சீனியர்களுக்கு நான் எப்படி ‘டீல்’ செய்வேன் எனத் தெரியும். தற்போதுள்ளவர்களுக்கு தெரியாது.
எனவே பொறுத்திருந்து பாருங்கள். அதை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதாவுக்கு ஏராளமான பிரச்சினைகள். அப்போதைய அமைச்சர்கள் எதிர்த்தனர், கட்சி இரண்டாகிறது, 2 சின்னத்தில் போட்டியிடுகிறோம், ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரானார்.
அதன்பின்பு கட்சியை ஒன்றிணைத்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்தோம். இதை எல்லாம் செய்தது நான்தான். அதன்பின்னர் அதிமுக ஆட்சி அமைத்தபோது ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள், திட்டியவர்களை கூட சபாநாயகராக்கினோம், அமைச்சராக்கினோம். எனவே என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்‘தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.