வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை அதிரடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டுள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்ற சட்டங்களால் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் அமெரிக்கா சென்றவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இன்று மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஜே.டி.வான்ஸ் இந்திய வம்சாவளி பெண்ணான உஷாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜே.டி.வான்ஸ் குடும்பம் குறித்து பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்த மாணவி கூறுகையில், “உங்கள் மனைவி உஷா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் கிடையாது. உங்கள் வம்சாவளியினர் அமெரிக்காவிற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்தனர். அதே சமயம், உங்கள் மனைவியின் வம்சாவளியினர் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்திருப்பார்கள். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எவ்வாறு மதம் குறித்து சொல்லிக் கொடுக்கிறீர்கள்?
அமெரிக்காவில் அளவுக்கு அதிகமானோர் குடியேறிவிட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். அந்த எண்ணிக்கையை எப்படி முடிவு செய்தீர்கள்? எங்களிடம் ஏன் கனவுகளை விற்பனை செய்தீர்கள்? நாங்கள் எங்கள் இளமைக் காலத்தை இந்த நாட்டிற்காக அர்ப்பணித்தோம். நீங்கள் எங்களுக்கு தர வேண்டியது எதுவும் இல்லை. நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்.
அப்படி இருக்கும்போது, ‘இப்போது நிறைய பேர் வந்துவிட்டார்கள், அவர்களை விரட்டுவோம்’ என்று நீங்கள் எப்படி கூறலாம்? நீங்கள் கேட்ட வரிகளை நாங்கள் செலுத்துகிறோம். நாங்கள் இந்த நிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? உங்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்றால் கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்று சொல்லப்போகிறீர்களா?” என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஜே.டி.வான்ஸ், “குடியேற்றம் என்பது குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்க அரசு ஒரு சத்தியத்தை செய்து கொடுத்தால் அதை நிச்சயம் நிறைவேற்றும். ஆனால், இங்கு நாம் பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினை என்பது சட்டவிரோத குடியேற்றம் பற்றியது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு சட்டங்களை இயற்றுகிறது. சில நூறு பேர் சட்ட ரீதியாக குடியேறி இருக்கிறார்கள் என்பதற்காக, பல மில்லியன் அளவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாம் தடுக்காமல் இருக்க முடியாது.
அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்த குடியேற்ற சட்டங்களை இனி வரும் காலங்களிலும் நாம் தொடர்ந்து பின்பற்ற முடியாது. அமெரிக்காவிற்கு வர வேண்டும் என்று நிறைய பேர் விரும்பலாம். ஆனால் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக, ஒட்டுமொத்த உலக மக்களின் நலன்களை விட அமெரிக்க மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே எனது முதல் கடமை.
மேலும் எனது மனைவி கிறிஸ்தவர் கிடையாது. அவர் இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் அவர் தீவிர மத நம்பிக்கை கொண்டவர் கிடையாது. நாங்கள் எங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாகவே வளர்க்க முடிவு செய்துள்ளோம். இதுபோல் கலப்பு திருமணம் செய்து கொள்வபர்கள், முதலில் அனைத்தையும் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என்று நான் கூறுவேன். ஞாயிற்றுக்கிழமைகளில் உஷா என்னுடம் தேவாலயத்திற்கு வருகிறார். நிச்சயம் அவர் ஒரு நாள் கிறிஸ்தவராக மாறுவார் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை அவர் மாறாவிட்டாலும், கடவுள் அனைவருக்கும் தனித்தன்மையை கொடுத்திருக்கிறார் என்பதால், அதை நான் ஒரு பிரச்சினையாக கருத மாட்டேன்” என்று தெரிவித்தார்.