ஐ.நா. சபையின் சிறப்பு நிபுணர் தாமஸ் ஆண்ட்ரூஸ் மியான்மர் மனித உரிமைகள் குறித்து தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:- இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மியான்மரை சேர்ந்த யாரும் ஈடுபடவில்லை என்றாலும், மியான்மரை சேர்ந்த அகதிகள் இந்தியாவில் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகினர். அந்த சம்பவத்துக்கு பிறகு இந்திய அதிகாரிகளால் சுமார் 40 மியான்மர் அகதிகள் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டனர்.கடந்த மே மாதத்தில் இந்திய அதிகாரிகள் ஏராளமான ரோஹிங்கியா அகதிகளை வங்காள தேசத்துக்கு நாடு கடத்தினர். இந்த நாடு கடத்தல்கள் குறித்து இந்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொது சபையின் 3-வது குழுவில் மியான்மர் அகதிகள் குறித்து ஐ.நா. நிபுணர் அறிக்கை ஆதாரமற்ற பாரபட்சமான கருத்தாக உள்ளது அசாமை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. திலீப் சைகியா அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தாவது:-இந்தியா தொடர்பான அறிக்கையில் உள்ள ஆதாரமற்ற மற்றும் பாரபட்சமான கருத்துகளுக்கு கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கிறேன். கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மியான்மர் அகதிகளை பாதித்தது என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. சிறப்பு நிபுணரின் இத்தகைய பாரபட்சமான மற்றும் கண்மூடித்தனமான பகுப்பாய்வை இந்தியா நிராகரிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.