இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாலும்கூட ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர் திவாகர். கூடவே நிறைய சண்டையும் போடுகிறார்.
இம்மாதிரியான காரியக் காரர்களை பிரபலமாக ஆக்குவது நம்முடைய ரசனையின் பாதாள வீழ்ச்சி.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 25
பிக் பாஸ் வீடு தாங்கள் வென்ற பொருட்களை பங்கு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க “நமக்கு ஒரு முறுக்கு கூட சாப்பிட கிடைக்கல. ஒரு காலத்துல ஓஹோன்னு இருந்த சூப்பர் வீடு. இன்னிக்கு ஒரு பிஸ்கெட்டுக்குகூட வழியில்லை” என்று சூப்பர் வீடு புலம்பிக் கொண்டிருந்தது.
“என்னோட ஸ்மைலுக்கு நிறைய பொண்ணுங்க அடிமை. இப்ப அதை செஞ்சு காட்டப் போறேன்” என்று காலையிலேயே ரீல்ஸ் இம்சையை ஆரம்பித்தார் திவாகர். ‘டேய்.. யாராவது அவனை தடுத்து நிறுத்துங்களேண்டா’ என்று நம் மைண்ட் வாய்ஸ் அலற ஆரம்பித்தது. பின்னணியில் கம்ருதீனும் அரோராவும் நமட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தனர்.
தனது நடிப்பு தாகத்திற்கு அணைபோடப் படுவதால் திவாகர் பொங்கியெழ, முந்தைய எபிசோடைப் போலவே இன்னொரு சண்டை தொடங்கியது. “பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கிட்டவன்தானே நீயி” என்று கம்ருதீனை நோக்கி திவாகர் சொல்ல, அதுவரை நக்கலாக சிரித்துக் கொண்டிருந்த கம்ருதீன் முகம் மாறி ‘டாய்..’ என்று களத்தில் இறங்க “அண்ணே.. தேவையில்லாததையெல்லாம் பேசாதீங்க” என்று பாரு பஞ்சாயத்திற்கு வர “சரிம்மா.. தங்கச்சி.. ஸாரிப்பா” என்று உடனே பம்மினார் திவாகர்.

கம்ரூவுடன் பிரேக் -அப் : அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு
பாரு கம்ருதீனுக்கு இடையே நட்பு, ரெமான்ஸ் பீரியட் முடிந்து ஊடல், மோதல் காலக்கட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. பாரு தன்னை ஒதுக்குவது குறித்து கம்முவிற்கு காண்டாகியிருக்கிறதுபோல. தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பாருவிடம் அவர் ஒரண்டை இழுக்க “டேய்.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். என்னைப் பத்தி உனக்குத் தெரியும். நம்மள பத்தி மக்களுக்குத் தெரியும். இந்த ஒரு வாரமாவது நேர்மையா இருந்து தப்பிச்சுக்கோ” என்று கம்ருதீனை எச்சரித்தார் பாரு.
இருவருக்குமான வாக்குவாதத்தில் தாறுமாறாக கத்திய பாரு, தனிமையில் சென்று அழுது புலம்பினார். விக்ரமிடம் சென்று அனத்திய கம்ருதீன் “நான் டீசண்டா ஒதுங்கிட்டேன். இவங்க யாரு என்னைப் பத்தி பேசறதுக்கு. என் கேமை நான் ஆட வேண்டாமா?” என்று அனத்த “ரெண்டு பேரும் நல்லாத்தானே பழகிட்டு இருந்தீங்க. என்ன ஆச்சு?” என்று சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் அராரோ.
“என்னை ஒரு மாதிரி… லவ் டார்ச்சர் பண்றான்… இந்த கம்மு” என்று திவாகரிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. பாருவையே ஒருத்தன் அசைச்சுப் பார்த்திருக்கிறான் என்றால் அவன் திறமையானவன்தான்.
‘அத்தான்.. செத்தான்’ – ரைமிங்கில் ஒரு ஃபுட் டாஸ்க்
லாக்கர் டாஸ்க். ‘கல்லுளி மங்கன்’ என்று தலைப்பாம். சுவையான உணவு, சுவையற்ற உணவு என்று இரண்டு விதமான உணவுகள் இருக்கும். முன்னதிற்கு அத்தான் என்று பெயர். பின்னதிற்கு செத்தான் என்று பெயர். (மெய்யழகன் திரைப்பட எஃபெக்ட்டா?!)
போட்டியாளர் உணவைச் சாப்பிடும்போது அவருடைய எக்ஸ்பிரஷன்களை வைத்து அந்த உணவு ‘அத்தானா அல்லது செத்தானா?’ என்று எதிரணி கண்டுபிடிக்கவேண்டும்.
யார் யார் போட்டியில் கலந்துகொள்வது என்கிற விவாதம் ஆரம்பித்தவுடன் சண்டையும் ஆரம்பித்தது. “சூப்பர் டீலக்ஸ் வீட்ல எல்லாத்துலயும் என்னை ஒதுக்கறாங்க.. எனக்கு உடன்பாடே கிடையாது. சாப்பாடு விஷயத்துலகூட சீப்பா நடந்துக்கறாங்க” என்று திவாகர் கூப்பாடுபோட ஆரம்பித்தது. எப்போதும் ஜென் மனநிலையில் இருக்கும் சபரி, சாப்பாடு விஷயம் என்றதும் பொங்கியெழுந்து வந்து “யார் சாப்பாடு விஷயத்துல சீப்பா நடந்தது” என்று ஆத்திரப்பட்டார்.

போட்டிக்கு முதலில் சென்ற விக்ரம், வெள்ளை நிறத்தில் இருந்த வஸ்துவை எடுத்து வாயில்போட்டு ‘அடடா.. என்ன சுவை’ என்பது போன்ற மந்தகாசமான புன்னகையை வெளிப்படுத்தினார். அப்போதே தெரிந்து போயிற்று, அது சுவையற்ற உணவு என்று. ‘செத்தான்’ என்று திவாகர் அவசரப்பட்டு சொல்லி விட ‘ஏன்யா யோவ்..’ என்று மற்றவர்கள் அவரைக் கோபித்துக்கொண்டார்கள். கோப்பையில் இருப்பதை முழுதும் வழித்து நக்கிக் காட்டினார் விக்ரம். அப்போதும் கூட சூப்பர் வீட்டால் முடிவு எடுக்க முடியவில்லை என்பதற்கான விக்கல்ஸின் நக்கல் நடிப்பு அது.
இறுதியில் திவாகர் சொன்னதுதான் உண்மை ஆயிற்று. பஸ்ஸர் அடித்தவுடன் ஓடிச் சென்று வாந்தியெடுத்தார் விக்ரம். அடுத்த வந்த கனியும் இதே தவறை செய்தார். முகத்தை அவஸ்தையாக வைத்துக்கொண்டு சாப்பிட ‘அத்தான்’ என்று சொல்லி சரியாக கண்டுபிடித்தார்கள். இறுதியில் இரண்டு அணிகளும் நான்கு மதிப்பெண்கள் பெற்று சமநிலையில் இருந்தது.
லாக்கர் டாஸ்க்கில் வென்ற பிக் பாஸ் வீடு
‘இது என்ன பிரம்மாதம். அடுத்து ஒரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு’ என்ற பிக் பாஸ், கூடுதலாக சில அத்தான், செத்தான் உணவு வகைகளைக் கொண்டுவந்தார். கடைசியில் திவாகரிடம்தான் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. அவர் எவ்வித எக்ஸ்பிரஷூனும் தராமல் சாப்பிட்டது நல்ல டெக்னிக். என்றாலும் எதிர் அணி சரியாகக் கண்டுபிடித்ததால் பிக் பாஸ் வீடு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது ‘நடிப்பு அரக்கனுக்கே நடிக்க வரலையே’ என்று வம்பிழுத்தார் கம்ருதீன். “ஓவர் ஆக்ட் பண்ண வேண்டாம்ன்னு பார்த்தேன் பாரு” என்று பிறகு சலித்துக் கொண்டார் திவாகர். (நீங்க பண்றது எல்லாமே ஓவர்ஆக்ட்தான் பாஸ்!) ஆயிரம் பாயிண்ட்ஸ் பரிசு பெற்ற பிக் பாஸ் வீடு, 800 மதிப்பெண்களுக்கு பொருட்களைக் கொண்டு வந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டது.
அடுத்த டாஸ்க் ரணகளமாக இருந்தது. ‘யார்ரா அந்தப் பையன்?’ என்பது தலைப்பு. போட்டியாளர் எடுக்கும் துண்டுச்சீட்டில் ஒரு வாக்கியம் இருக்கும். அதற்குப் பொருத்தமானவர் யார் என்று காரணங்களுடன் சொல்ல வேண்டும்.

முதலில் வந்த அராரோ, ‘காக்காய் கூட்டம்’ என்பதற்கு பாரு, திவாகர், கலையை உதாரணம் சொன்னார். “இப்பவாவது டாஸ்க் ஆட எழுந்து வந்தீங்களே.. சபாஷ்” என்று பாராட்டினார் பிக் பாஸ். ‘விஷ பாட்டில்’ என்கிற பட்டத்தை வினோத்திற்கு தந்து அழகு பார்த்தார் கலை. ‘அத்தான், செத்தான் யார்?’ என்பதற்கு கனி மற்றும் கலையை சொன்னார் வினோத்.
‘மேல் மாடி காலி’ என்பதற்கு பாரு மற்றும் திவாகரை சொல்லி பழிவாங்கினார் கம்ருதீன். “என்னைத்தான் சொல்லுவேன்னு நல்லாத் தெரியும்” என்று ஒழுங்கு காட்டினார் பாரு. ‘முகத்திற்கு முன்னால் சிரிப்பான், முதுகுகிற்குப் பின்னால் குத்துவான்’ என்பதற்கு வினோத் மற்றும் பிரவீனை திவாகர் தேர்ந்தெடுத்தது பொருத்தமானது.
‘எப்பவும் என் பெயரைத்தான் சொல்வீங்களா?” – பெருமையுடன் சலித்துக் கொண்ட பாரு
‘வேலை செய்யற மாதிரி பாவ்லா’ என்பதற்கு பாரு மற்றும் திவாகரைத் தேர்ந்தெடுத்தார் கனி. ‘நடிப்பு அரக்கனுக்கே டஃப் பைட் கொடுப்பதுபோல் நடிப்பது யார்?’ என்பதற்கு பாரு மற்றும் வியன்னாவைத் தேர்ந்தெடுத்தார் கெமி.
அடுத்த வந்த விக்ரம் சொன்னது எல்லாமே தவறாகப் போயிற்று. ‘இவங்களுக்கு பேமெண்ட் வேணாம். பஸ் சார்ஜ் கொடுத்தா போதும்’ என்பது வாக்கியம். அவர் அதைப் பாராட்டும் வாக்கியமாக நினைத்துக்கொண்டு சபரி, பிரவீன், கெமி ஆகிய மூவரின் உழைப்பையும் பாராட்டி ‘ஒரு ரூபா கொடுத்தா, நூறு ரூபாய்க்கு வேலை செய்வாங்க’ என்று புகழ “விக்ரம்.. நீங்க வாக்கியத்தை சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்களா?” என்று குறுக்கிட்டார் பிக் பாஸ்.

‘இவங்களுக்கு பேமென்ட் கொடுக்கத் தேவையில்லை. போக வர கன்வேயன்ஸ் கொடுத்தா போதும்’ என்றால் பிக் பாஸ் வீட்டிற்கு எவ்வித உபயோகமும் இல்லாமல் சும்மா இருக்கிறவர்கள் என்று பொருள். ‘கலை மற்றும் திவாகரை’ விக்ரம் சொன்னபோது ‘செல்லாது.. செல்லாது.. போங்க’ என்று அவரை அமர வைத்தார் பிக் பாஸ்.
விக்ரம் சொல்ல முடியாமல் தவித்ததற்கு விடை சொன்ன எஃப்ஜே, திவாகர், துஷார், கலை ஆகிய மூவரையும் காரணங்களோடு சொன்னார். “எப்பவும் தூங்கிக்கிட்டே இருக்காரு” என்று எஃப்ஜே சொன்னதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார் திவாகர். “இவன்தான் எப்பவும் சீக்கு வந்த கோழி மாதிரி பெட்ரூம்ல தூங்கிக்கிட்டே இருக்கான். என்னைப் போய் சொல்றான். இந்த ஷோ வைரல் ஆகறதே என்னாலதான். ஒரு முறையாவது நாமினேஷன் போய் வரட்டும். அப்ப தெரியும்” என்று எஃப்ஜேவை திவாகர் வறுத்தெடுக்க, அவர் பாட்டுக்கு கூலாக சம்மர் சால்ட் பல்டி எல்லாம் அடித்துக் கொண்டிருந்தார். “என்னா குறளி வித்தையெல்லாம் காட்டறான்” என்று கமெண்ட் செய்தார் பாரு.
‘குழாயடிச் சண்டைன்னா யாரு ஞாபகத்துக்கு வராங்க?”
அடுத்து வந்த பாரு ‘விக்டிம் கார்டை விசிட்டிங் கார்டா பயன்படுத்தறாங்க’ என்கிற வாக்கியத்திற்கு கம்ருதீன் பெயரை சொல்லி பழிவாங்கினார். இரண்டாவது பெயரை சொல்வதற்கு மிகவும் தடுமாறி பிறகு அரேராவின் பெயரைச் சொன்னார். (பாருவிற்கே தடுமாற்றமா?!)
அடுத்த வாக்கியம் ‘குழாயடிச் சண்டை’. இந்தப் பெயரை கேட்டதுமே நம் மனதில் ஒரு காரெக்டரின் பெயர் உடனே ஞாபகத்திற்கு வரும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு வராமல் போகுமா? யெஸ். பாருதான் அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர். பாருவோடு கம்ருதீன், ரம்யா ஆகிய பெயரையும் கெமி சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பட்டத்தை மனச்சாட்சியோடு ஒப்புக் கொண்டார்கள்.

திவாகர் இல்லாமல் ஷோ இல்லை – மறைமுக ஆதரவு தந்த பிக் பாஸ்
‘சாப்பிடறது.. தூங்கறது ரிப்பீட்டு’ என்கிற வாக்கியத்திற்கு பாரு, திவாகர், கலை ஆகிய மூவரையும் ரம்யா சொல்ல பிக் பாஸிற்கே கோபம் வந்தது. ‘மக்கள் இதை ஒத்துக்குவாங்களா?” என்று எதிர்ப்பு தெரிவித்தார். பின்னே? இந்த ஷோவிற்கு உண்ணாமல், தூங்காமல் மெஜாரிட்டியான கன்டென்ட் கொடுத்து உழைப்பதே பாரு மற்றும் திவாகர்தான். அவர்களைப் போய் தூங்கறாங்க என்றால் பாஸிற்கு கோபம் வராதா?
‘தூங்கறாங்க’ என்றவுடன் திவாகருக்கு மறுபடியும் கோபமாகிவிட்டது. ‘உடம்பு வலி. கால் வலி.ன்னு சொல்லி ரம்யாதான் எப்பவும் தூங்கறா.. என்னைச் சொல்வதா?” என்று திவாகர் எகிற ‘டாய்.. என்று வரிந்து கட்டிக்கொண்டு ரம்யாவும் களத்தில் இறங்க சூழல் ரணகளமாகியது. ரம்யா ஒருமையில் பேச ‘தராதரம் இல்லாத பேசாத’ என்று திவாகர் வார்த்தையை விட சபரியும் கோபத்தில் களத்தில் இறங்கினார். ‘நீ க்ரூப்பிஸம் பண்ணாத சபரி” என்று அவருடனும் மல்லுக்கட்டினார் திவாகர்.
“நல்ல விஷயத்துக்கு க்ரூப்பிஸம் பண்றது தப்பு கிடையாது” என்று புது லாஜிக் சொன்னார் கனி. பிக் பாஸ் ஏற்க மறுத்ததால் அரோரா மற்றும் கலையின் பெயரைச் சொன்ன ரம்யா “இந்தக் கொசுத் தொல்லை தாங்கலை” என்று கையை தட்டி விட்டுக்கொண்டு சென்றார்.
பிக் பாஸிடம் பாராட்டு பெற்று ஆச்சரியப்படுத்திய வியன்னா
கடைசியாக வந்த வியன்னா பிக் பாஸின் பாராட்டைப் பெற்றது ஆச்சரியம். ‘ஜெயிக்கிற குதிரை மேல சவாரி செய்யறாங்க’ என்கிற வாக்கியத்திற்கு திவாகர் பெயரைச் சொன்ன கம்ருதீன் அதற்கான காரணத்தை தடுமாற்றத்துடன் சொல்ல “செல்லாது. நீ சும்மா இருப்பா தம்பி. நீ சொல்லுடா தங்கம்’ என்று வியன்னாவை கேட்க “திவாகர் ஜெயிக்கிற குதிரை மாதிரி இருக்கிறார். அவரை காப்பி செய்து வினோத் செய்யும் கிண்டல்கள் எரிச்சல் மூட்டுது” என்று சொல்ல திவாகர் பலமாக கைத்தட்டி தன் மகிழ்ச்சியை ஆத்திரத்துடன் வெளிப்படுத்தினார்.
“நான் ஒண்ணும் ஒரு வருஷ ஃபேமஸ் கிடையாது. இருபது வருஷமா ஃபேமஸ்” என்று பலவீனமாக பதிலடி தந்தார் வினோத்.

“சூப்பர் தாயி.. அடுத்த பெயரைச் சொல்லு” என்று பிக் பாஸ் உற்சாகமூட்ட “அதாவது பார்த்தீங்கன்னா.. இந்த கனி, சபரி, எஃப்ஜே.. மூணு பேரும் எப்பவும் ஒட்டுக்கா இருக்காங்க.. ஒருத்தரையொருத்தர் சப்போர்ட் பண்ணிக்கறாங்க.. அப்படியே ஃபைனல் வர்ற வரைக்கும் போயிடலாம்ன்னு பார்க்கறாங்க” என்று சொல்ல கனி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் குறுக்கே வந்த பிக் பாஸ் “வியன்னா. டார்லிங்.. செம இதை எதிர்பார்க்கவேயில்ல. வெல்டன்” என்று பாராட்ட கனி சோர்ந்து அமர்ந்தார். பிக் பாஸிடமிருந்து பாராட்டு பெற்ற வியன்னா துள்ளிக் குதித்தார்.
‘அன்பு கேங்’ ஸ்ட்ராட்டஜி ஒருவழியாக வெளிப்பட்டதே என்று பாரு துள்ளலாக டான்ஸ் ஆடிக் காட்டினார்.
எப்படியோ, வழக்கம் போல் சில கலவரங்கள் நடந்தாலும் இந்த ‘யார்ரா இந்தப் பையன்’ டாஸ்க் சற்று சுவாரசியமாகச் சென்றது. இது போன்ற டாஸ்க்குகளை பிக் பாஸ் இனிமேல் யோசிக்கலாம்.
