மதுரை: “சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகிய நான்கு பேரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று மதுரையில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது: ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் டிடிவி தினகரன். அவர் அதிமுகவை பற்றி சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ஆளே கிடையாது.
அதேபோல், பழனிசாமிக்கு முன்பாக பிறந்துள்ளவர் என்ற ஒரு தகுதியை மட்டும் செங்கோட்டையன் பெற்றுள்ளார். அதை தவிர மற்ற அனைத்து தகுதிகளையும் பழனிசாமி பெற்றுள்ளார். செங்கோட்டையன் முதல்வர் வாய்ப்பை 2 முறை விட்டுக் கொடுத்துள்ளதாக கூறுகிறார். வாய்ப்பு வந்தும் ஏன் விட்டுக் கொடுத்தார்?, வாய்ப்பு வந்தால் யாராவது முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார்களா?. பிக்பாக்கெட் அடிப்பது போல் முதல்வர் பதவியை அடித்து விடுவார்கள். 2026-ம் ஆண்டு முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்பது இறைவனின் தீர்ப்பு.
ஜெயலலிதா இருக்கும்போது முதல்வராக வரவேண்டும் என செங்கோட்டையன் ஆசைப்பட்டதை அதிமுக நிர்வாகிகள் ஆதாரத்துடன் அவரிடம் தெரிவித்ததால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது,
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுக சட்டத்தின்படியும், பொதுக்குழு முடிவின்படி நீக்கப்பட்டவர்கள். அதனால், செங்கோட்டையன் உள்பட அவர்கள் 4 பேரையும் அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பழனிசாமி வசம் 75 எம்எல்ஏக்கள் உள்ளனர். சசிகலா, டிடிவி உள்ளிட்டவரிடம் ஒரு எம்எல்ஏ-வாது உள்ளார்களா?
நான் உள்பட பழனிசாமி பக்கம் இருப்பவர்கள் எல்லாம் 1972 ஆண்டு முதல் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கத்தில் உள்ளோம். நாங்கள் சொல்கிறோம், அவர்கள் நான்கு பேரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியே்ார் உடன் இருந்தனர்.