முசாபர்பூர்: கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆட்சிக் காலத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அந்த மாநிலத்தின் முசாபர்பூர் மற்றும் சப்ராவில் நேற்று பாஜக பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சத் பண்டிகையை ஒட்டி பிஹார் பெண்கள் விரதமிருந்து சத்தி மையாவை வழிபடுகின்றனர். ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைவர்கள், சத்தி மையாவை அவமதித்து உள்ளனர். அவர்களை பிஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிஹாரின் பாரம்பரியத்தை போற்றி பாதுகாத்து வருகிறது. சத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற அதிதீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பிஹார் தேர்தலையொட்டி இரு ஊழல் இளவரசர்கள் கைகோத்து உள்ளனர். ஒருவர் (ராகுல் காந்தி) நாட்டின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர். மற்றொருவர் (தேஜஸ்வி யாதவ்) பிஹாரின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர். ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள இருவரும் ஜாமீனில் வெளியே நடமாடுகின்றனர்.
காங்கிரஸும் ஆர்ஜேடியும் ஒற்றுமையாக இருப்பது போன்று வெளிஅரங்கில் நடிக்கின்றன. உள்அரங்கில் இரு கட்சியினரும் மிகக் கடுமையாக மோதிக் கொள்கின்றனர்.
ஆர்ஜேடி சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை, பொய்களின் அறிக்கையாகும். கடத்தல், கொள்ளை, ஊழலுக்கு வித்திடும் வகையில் ஆர்ஜேடி-யின் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது.
கடந்த கால ஆர்ஜேடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. ஆர்ஜேடி ஆட்சியில் சுமார் 40,000-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்பட்டனர். கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றன. ரயில்வே துறையின் சொத்துகள் சூறையாடப்பட்டன.
ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைவர்கள், அம்பேத்கரை அவமதித்தனர். பட்டியலின மக்கள் மீது அவர்களுக்கு துளியும் அக்கறை கிடையாது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அம்பேத்கருக்கு முதல் மரியாதை செலுத்தி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட செயலிக்கு பீம் என்று பெயரிடப்பட்டது. பட்டியலின மக்களின் வளர்ச்சிக்காக தே.ஐ. கூட்டணி அரசு அயராது பாடுபட்டு வருகிறது.
பிஹார் மாநில பெண்களின் முன்னேற்றத்துக்காக நானும் முதல்வர் நிதிஷ் குமாரும் இரவு பகலாக உழைத்து வருகிறோம்.
சுயதொழில் தொடங்குவதற்காக 1.2 கோடி பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது. தே.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திமுக மீது குற்றச்சாட்டு: கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பணியாற்றும் பிஹார் மக்களை காங்கிரஸ்
தொடர்ந்து அவமதித்து வருகிறது. இதேபோல தமிழகத்தில் பணியாற்றும் பிஹார் மக்களை திமுக தலைவர்கள் அவமதித்து வருகின்றனர்.
பிஹாரையும் பிஹார் மக்களையும் அவமதித்த தலைவர்களை, காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக அழைத்து வருகிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த பிஹாரையும் காங்கிரஸ் அவமதித்து வருகிறது. ஆர்ஜேடி, காங்கிரஸ் விரிக்கும் வலையில் மக்கள் சிக்க மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிஹார் அதிவேகமாக முன்னேறி வருகிறது. வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்று
பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.