பெங்களூரு: இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மேம்படுத்த மத்திய அரசு அதிகளவிலான நிதியை வழங்குவதாகவும், மற்ற இந்திய மொழிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் உருவான 70-வது தினத்தை முன்னிட்டு பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சித்தராமையா, “கன்னடத்துக்கு எதிரான அனைவரையும் நாம் எதிர்க்க வேண்டும். கர்நாடக மாநிலம் மத்திய அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாயை வழங்குகிறது. ஆனால் அதற்குப் பதிலாக ஒரு சிறிய பகுதியை மட்டுமே திரும்பப் பெறுகிறது.
கன்னட மொழிக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்தியைத் திணிக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்தி மற்றும் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசால் அதிகளவில் நிதியுதவி வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில் நாட்டின் பிற மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன. கர்நாடகாவின் வளர்ச்சிக்குத் தேவையான நிதி மறுக்கப்படுகிறது. கன்னட மொழியின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை மறுப்பதன் மூலம் செம்மொழிக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கர்நாடகாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது, இந்தியை திணிக்கிறது. வளர்ந்த நாடுகளின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் சிந்திக்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், கனவு காண்கிறார்கள். ஆனால் இங்கே நிலைமை அதற்கு எதிரானது. ஆங்கிலமும் இந்தியும் நம் குழந்தைகளின் திறமையை பலவீனப்படுத்துகின்றன.” என்று அவர் கூறினார்.