ஜெய்ப்பூர்: “இந்த முறை தான் முதல்வர் ஆக முடியாது என்பது நிதிஷ் குமாருக்குத் தெரியும். அதனால்தான், நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை” என ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிஹார் தேர்தலுக்கு நிதிஷ் குமார் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அசோக் கெலாட், “தேர்தல் வாக்குறுதிகள் குறித்து நிதிஷ் குமார் எங்கே பேசினார். தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது, வெளிநடப்பு செய்வதைப் போல அவர் உடனடியாக கிளம்பிவிட்டார். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு ஒரு நொடி கூட அவர் நிற்கவில்லை. அந்த செய்தியாளர் சந்திப்பு என்பது கிட்டத்தட்ட 26 வினாடிகள்தான் நடந்தது. மிக குறுகிய பத்திரிகையாளர் சந்திப்பு அது.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவர் ஏதாவது பேசி இருக்கலாம். ஆனால், வாக்குறுதிகள் விஷயத்தில் பாஜகவினர் அவரை சம்மதிக்க வைக்கவில்லை என்பதை அவர் மனதளவில் புரிந்து கொண்டார். எனவே, அவர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்த்தார். ஒரு சடங்கு போல பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. முடிந்ததும் அவர் வெளியேறி விட்டார். இதில் இருந்தே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் யூகிக்க முடியும். எப்படி இருந்தாலும், தேர்தல் கருத்துக்கணிப்புகளில் தேஜஸ்வி முதலிடத்தில் இருக்கிறார். ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் நடத்திய பிரச்சாரங்களுக்குக் கிடைத்த பலன் இது.
ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்தும் மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்தும் பார்த்ததை அடுத்து தற்போது பிஹார் விஷயத்தில் முழு நாடும் கவலை கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாடாளுமன்றத் தேர்தலின்போது வெற்றி பெறாத பாஜக, அடுத்த சில மாதங்களில் நடத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுகிறது என்றால் அங்கு என்ன மாதிரியான நாச வேலைகள் நடந்திருக்க வேண்டும். எந்த அளவுக்கு பண பலம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
நமது நாட்டின் ஜனநாயகம் எங்கு செல்கிறது என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்பாடுகள் தொடர்ந்தால், நாடு கடுமையான ஆபத்துக்களை எதிர்கொள்ளும். ஜனநாயகம் நிலைத்து நிற்குமா அல்லது அது வெறும் பெயரளவில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையைப் பாருங்கள். சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக அவர்களின் மொழி, கடிதங்களுக்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் சர்வாதிகார மனப்பான்மையால் நிறைந்திருப்பதை நான் காண்கிறேன்” என தெரிவித்தார்.