“என் முதுகில் குத்திக் குத்தி காயம், ரத்தம்'' – மேடையில் கலங்கி அழுத நடிகர் ஆனந்த் ராஜ்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்பெனி”.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் நடிகர் ஆனந்தராஜ்.

அப்போது அவர் கூறியதாவது:
“இந்தப் படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இங்கு இந்தப் படத்தை வாழ்த்த வந்திருக்கும் ஆர்.கே. செல்வமணியும், ஆர்.பி. உதயகுமாரும் என் நண்பர்கள்.

`மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' படத்தின் இசை வெளியீட்டு விழா
`மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

இவர்களின் முதல் படத்தில் நான் நடித்திருக்கிறேன். படத்துக்காக எவ்வளவு மெனக்கெட முடியுமோ, அந்த அளவு இருவரும் உழைப்பார்கள். அவர்களுக்கு நிகராக உழைத்ததால்தான் நான் இன்னும் இந்த திரைத்துறையில் இருக்கிறேன்.

நான் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ அதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவேன். என்னால் பயமுறுத்தவும் முடியும், சிரிக்க வைக்கவும் முடியும். ஆனால், இந்த திறமையை என்னிடம் வளர்த்தவர்கள் இந்த இயக்குநர்கள்தான்.

எங்களிடம் பணம் குறைவாக இருக்கலாம், ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பணம் அதிகமாக இருந்தால் அதை நாம் காப்பாற்ற வேண்டும்; குறைவாக இருந்தால் அது நம்மை காப்பாற்றும்.

இதை ரஜினி மாதிரி பெரிய ஸ்டார் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள். அதனால் அதை விட்டுவிடலாம். நான் இந்த துறைக்கு வரும்போது எனக்கு யாரும் கிடையாது; எந்தப் பின்புலமும் கிடையாது.

நான் மட்டுமல்ல, ஆர்.கே. செல்வமணியும், ஆர்.பி. உதயகுமாரும் போராடி இந்தத் துறையில் கால்பதித்தவர்கள். நடிக்கத் தொடங்கும்போதெல்லாம் உள்ளுக்குள் அதீத பயம் இருக்கும்.

நடிகர் ஆனந்த ராஜ்
நடிகர் ஆனந்த ராஜ்

என்னை விட இந்தத் திரைத்துறையை அதிகம் நேசித்தவர் என் தந்தை. பார்த்திபன் சாரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

ஷூட்டிங் முடிவதற்கு இரவு 11 மணி ஆகும் எனக் கூறினார்கள். நான் காத்திருந்தேன். ஆனால் இரவு 8 மணிக்கே ஷூட்டிங் முடிந்துவிட்டது என்றார்கள்.

நான் கிளம்பும்போது, அடுத்த இரண்டு நாள்களுக்கு ஷூட்டிங் கிடையாது எனக் கூறினார்கள். அடுத்த நிமிடமே எனக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தது – என் அப்பா இறந்துவிட்டார் என்றார்கள்.

அன்று பௌர்ணமி. வீட்டுக்குச் சென்று அப்பாவின் உடலைப் பார்த்தபோது, “உன்னைப் பார்க்க வரவழைக்கத்தான் இரண்டு நாள் ஷூட்டிங்கை நிறுத்தினாயா?” என்றுதான் கேட்கத் தோன்றியது.

நான் ஒரு நடிகராக இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு என் அப்பா முக்கிய காரணம். இன்று எனக்கு இந்தத் திரைத்துறையில் போட்டி இல்லை என்று நினைக்கிறீர்களா? – சராசரி நடிகன் தான்.

என் முதுகில் குத்தியவர்களால் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. என்னைக் குத்திக் குத்தி கொலை செய்துவிட்டார்கள். வீட்டுக்கு வந்து ஒரு படத்துக்குப் பேசுவார்கள்; ஆனால் அந்தப் படத்தில் நான் இருக்க மாட்டேன்.

நடிகர் ஆனந்த ராஜ்

காரணம் தெரியாது. என்ன செய்றதுனு எனக்கு வேற வழி தெரியல, ஒரு படத்துக்கு 10 பேர் வேண்டுமென்றால், அதைத் தேர்வு செய்வதற்கென ஒரு குழு இருக்கிறது. அதனால், சொல்கிறேன்.

ஒரு கலையை கலையாக மட்டும் பாருங்கள். ஆர்.கே. செல்வமணி. ஆர்.பி உதயகுமார், பேரரசு போன்றவர்களெல்லாம் பெரும் இயக்குநர்கள்.

ஆனால், எங்களுடைய சாபக்கேடா என்ன எனத் தெரியவில்லை. நம்மையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு திரை உலகை கட்டமைக்கிறார்கள். அதையும் கடந்துதான் ஓடிக்கொண்டே இருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.