பாட்னா:
பீகார் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் வருகிற 4 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனால் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் நான்கு நாட்களே அவகாசம் உள்ளது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பீகாரில் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். நாலந்தா நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-“காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பீகார் மக்களின் மன உணர்வு தெரியாது. அதனால் அவர் பீகார் மக்கள் மிகவும் விரும்பி கொண்டாடும் சூரிய பூஜையை கடுமையாக இழிவுபடுத்திப் பேசியுள்ளார். ராகுல் காந்திக்கு எப்போதுமே தாய்வழி வீடான இத்தாலி பற்றிதான் தெரியும். அவருக்கு அந்த நாட்டின் கலாச்சாரம்தான் அடிப்படையாக உள்ளது. அதனால்தான் அவருக்கு இந்திய கலாச்சாரம் பற்றி எதுவும் தெரியாது. ராகுலின் இந்த பேச்சுக்கு அவர் விலை கொடுத்து தீர வேண்டும். சூரிய பூஜையை அவமதித்த அவரை பீகார் மக்கள் பழிக்கு பழி வாங்குவார்கள்.
ராகுல் பிரதமரையும் அவரது குடும்பத்தினரையும் அடிக்கடி தரம் தாழ்த்திப் பேசுகிறார். ஓட்டுக்காக பரதநாட்டியம் ஆடுவார்கள் எனவும் பேசுகிறார். பிரதமர் மோடி நடத்தும் சூரிய பூஜையை ‘நாடகம்’ என்கிறார். அவருக்கு சூரிய பூஜை என்றாலே என்னவென்று தெரியாது; தெரிந்தது எல்லாம் இத்தாலியில் நடக்கும் கொண்டாட்டங்கள்தான்.ராமர் கோவிலை கட்ட விடாமல் காங்கிரஸ்காரர்கள் என்னவெல்லாமோ செய்து வந்தார்கள். தற்போது அங்கு ஆலயம் கட்டப்பட்டு அமைதி நிலவுகிறது.
பீகாரில் இதற்கு முன்பு ஆட்சி செய்த லாலு பிரசாத் யாதவ் சொல்ல முடியாத அளவுக்கு காட்டாட்சி நடத்தினார். அவரது ஆட்சி காலத்தில் 32,000 பேர் கடத்தப்பட்டனர்; 12 பெரிய படுகொலைகள் நடந்தன. அவற்றை நாங்கள்தான் முடிவுக்கு கொண்டு வந்தோம்.
பீகார் மாநில பெண்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களுக்கு நாங்கள் நிதி உதவி செய்து வருகிறோம். அந்த பணத்தை எல்லாம் திரும்பப் பெறுவார்கள் என்று தேஜஸ்வி யாதவ் பொய் பிரசாரம் செய்து வருகிறார். ஏழை, எளிய பெண்கள் மேம்பாட்டுக்காக நாங்கள் கொடுத்த அந்த பணத்தை யாராலும் திரும்பப் பெற முடியாது. லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் கொள்ளையடித்த பணத்தையே அவர்கள் திரும்பக் கொடுக்க வேண்டும். பீகாரில் தற்போது சட்டம், ஒழுங்கு மேம்பட்டு உள்ளது. அடுத்த முக்கிய விளையாட்டு போட்டிகளில் பீகார் இளைஞர்கள் சாதனை படைக்கும் வகையில் அவர்களை மேம்படுத்துவோம்,” என அமித்ஷா பேசினார்.