மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் மற்றும் போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
மயிலாடுதுறையில் வன்னியர் சங்கநகர செயலாளராக இருந்தவர் கொத்தத் தெருவை சேர்ந்த கண்ணன் (27). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கடந்த 2021 நவம்பர் மாதம் ஓர் உணவகத்தில் சாப்பிடும்போது மோதல் ஏற்பட்டதில், கலைஞர் குடியிருப்பை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவரை கண்ணன் தாக்கியுள்ளார். கதிரவன் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்கு பதிவு செய்து,கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்து கண்ணன் விடுவிக்கப்பட்டார். ஆக.17-ம் தேதி இரவு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த கண்ணனை, அங்கு வந்த கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கதிரவன் உட்பட 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
பின்னர், வழக்கில் தொடர்புடைய 22 பேரில் ஒருவரான கலைஞர் குடியிருப்பை சேர்ந்த அஜித்குமார் 2024 மார்ச் 20-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கண்ணனின் சகோதரர் மில்கி என்கிற சந்திரமோகன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், கண்ணன் கொலை வழக்கு விசாரணை, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், குற்றம்சாட்டப்பட்ட கதிரவன் (41), தேவா (எ) மகாதேவன் (30), சேது (26), சந்தோஷ் (21), திவாகர் (26), கார்த்திக் (30), சுபாஷ் சந்திரபோஸ் (29), ஹரிஷ் (25), பிரித்திவிராஜ் (31) ஆகிய 9 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பு வழங்கினார். 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
போலீஸாருக்கு பாராட்டு: இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ராம சேயோன் ஆஜரானார். வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் மற்றும் போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார். வழக்கில் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், அதில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் பிறழ் சாட்சி அளித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்க உள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தண்டனை பெற்ற 9 பேரும் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆம்புலன்சில் தீர்ப்பு விவரம்: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபாகரன் என்பவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தீர்ப்பையொட்டி ஆம்புலன்ஸ் வாகனத்தில் நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வரப்படார். இதையறிந்த நீதிபதி சத்தியமூர்த்தி, வழக்கு விசாரணை நடைபெற்ற முதல் தளத்தில் இருந்து இறங்கி வந்து,ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த பிரபாகரனிடம், ‘‘உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால், விடுதலை செய்யப்படுகிறீர்கள்’’ என்று தெரிவித்தார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரும் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களும் அவர்கள் இடையே முன்விரோதம் ஆழமாவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.