ஹராரே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே வென்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரசா அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 18 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் டி20 தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நாளை மறுதினம் ஹராரேவில் நடைபெற உள்ளது.