சென்னை: அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று.
பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிப்படுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது. திமுகவின் திசைதிருப்பும் நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர். ஜனநாயகத்தின் மீதுசிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.