கெய்ரோ,
எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் ‘கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம்’ இன்று திறக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் மன்னர்கள், மந்திரிகள் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை “மனித கலாச்சாரம் மற்றும் நாகரிக வரலாற்றில் ஒரு விதிவிலக்கு” என்று எகிப்து ஜனாதிபதி அலுவலகம் பாராட்டியுள்ளது. இது ஒற்றை நாகரிகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய எகிப்தின் வாழ்க்கையை விவரிக்கும் 50,000-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகம் கெய்ரோவிற்கு வெளியே, 3 பிரமிடுகள் மற்றும் ஸ்பிங்க்ஸ் ஆகியவை அமைந்திருக்கும் கிசா பீடபூமியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், 2014-ம் ஆண்டு எகிப்து ஜனாதிபதியாக அப்தெல்-பத்தா எல்-சிசி பதவியேற்றபோது முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும். சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானம் 2005-ல் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் காரணங்களால் கைவிடப்பட்டது.
தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், அருகிலுள்ள பிரமிடுகளைப் போலவே உயர்ந்த, முக்கோண கண்ணாடி முகப்பைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 24,000 சதுர மீட்டர் (2,58,000 சதுர அடி) நிரந்தர கண்காட்சி இடம் உள்ளது. மன்னர் துட்டன்காமூனின் சேகரிப்பில் இருந்து எடுக்கப்பட்ட 5,000 கலைப்பொருட்களுக்காக 2 அரங்குகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டரால் 1922-ம் ஆண்டு துட்டன்காமூனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கிடைத்த பொருட்கள் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
மேலும், அருங்காட்சியகத்தை பிரமிடுகளுடன் இணைக்கும் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அவற்றுக்கிடையே கால்நடையாகவோ அல்லது மின்சார வாகனங்கள் மூலமாகவோ செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது. அருங்காட்சியகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அருகிலுள்ள கிசா பிரமிடுகளையும் எகிப்து அரசு புதுப்பித்துள்ளது. அருங்காட்சியக வாயில்களுக்கு வெளியே ஒரு மெட்ரோ நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கெய்ரோ நகரத்திற்கு மேற்கில், அருங்காட்சியகத்தில் இருந்து 40 நிமிட தூரத்தில் ஸ்பிங்க்ஸ் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் வரும் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.