ஒட்டாவா,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து உலக நாடுகளிடம் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரிவிதித்து வருகிறார். அண்டை நாடான கனடாவில் இருந்து அமெரிக்கா 75 சதவீதம் அளவிலான பொருட்களை கொள்முதலான நிலையில் அதனை தவிர்க்க அந்த நாட்டின் மீது 25 சதவீதம் வரி விதித்தார்.
மேலும் பெண்டானில் ரசாயனத்தை சீனா, ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்ததற்காக மேலும் 10 சதவீதமாக அதிகரித்து 35 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் கனடாவின் புகழ்பெற்ற ஒண்டோரியா மாகாண கவர்னரான டோக் போர்டு அனுமதியுடன் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்று அங்குள்ள தொலைக்காட்சிகளில் அரசு சார்பில் ஒலிபரப்பப்பட்டது. அந்த விளம்பரத்தில் டிரம்புக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டிருந்ததும், அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் ‘வரிவிதிப்புகள் வர்த்தக போருக்கு வித்திட்டு பொருளாதார பேரழிவை உண்டாக்கும்’ என்ற பிரபல வரிகளும் அதனோடு இணைக்கப்பட்டன.
இந்த விளம்பரம் டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி டிரம்பிடம் தொலைபேசியில் பேசினார். மேலும் இதுகுறித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விளம்பர ஒலிபரப்புக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என டிரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கனடா எனக்கு மிகவும் பிடிக்கும். மார்க் கார்னி என்னுடைய நல்ல நண்பர்தான். இருப்பினும் அந்த போலியான விளம்பரம் எனக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் கனடா உடன் எந்த வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை” என்றார்.