மதுரை: பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: “பிரதமர் மோடி தேர்தலை காரணமாக வைத்து மீண்டும் ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர். அவர்களை வரவேற்கிறோம். அவர்கள் இன்றி இங்கு பல வேலை நடக்காது என, நமக்கு நன்றாகத் தெரியும்.
தமிழகத்தில் அவர்களுக்கு எந்த நெருடலும் இல்லை. இதனாலேயே உத்திரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர். இங்கு அவர்களுக்கு வாழ்வாதாரம் உள்ளது.
இந்தியாவிலேயே தூய்மையற்ற நகரம் பட்டியலில் மதுரை முதலிடம் பெறுவது வேதனை அளிக்கிறது ‘ஸ்வச் பாரத்’ தூய்மையான நகரங்களில் டாப் 50ல் ஒரு நகரம் கூட தமிழகத்தை சேர்ந்தல்ல. குறிப்பாக பொது இடங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதை என்னை பொருத்தவரை மிக குறைவு. இதில் அரசை தவறு சொல்ல முடியாது.
வாக்காளர் பட்டியலில் சரி பார்ப்பது தவறில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களை நீக்க வேண்டும். எந்த விசாரணையும் இன்றி சிலரை சேர்க்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வருகிறது. யார் பெயரை நீக்கினாலும் அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வேலைக்கு என வருவோரை வாக்காளராக மாற்றுவதை ஒரு நாளும் ஏற்க முடியாது.
அதிமுகவில் எல்லா சோதனைகளையும், வெற்றிகளையும் கண்டவர் செங்கோட்டையன். அவரைக் கட்சியில் இருந்து நீக்கியது வேதனை. பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுக இறங்கும் முகம்தான் கீழ் நோக்கியே செல்கிறது” என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.