சென்னை: மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் பேசியதாவது: தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உருவான நிகழ்வை கொண்டாடுகிறோம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒரே பாரதமாக இல்லை. 560 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தன.
அவற்றை எல்லாம் தனது வலிமையான, உறுதியான நடவடிக்கைகளால் 2 ஆண்டுகளில் ஒன்றிணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல். அவரது பிறந்த நாளான அக்.31-ம் தேதியை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம்.
இந்தியா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், காலநிலை கொண்ட ஒரு அழகான பெரியதேசம். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே நமது பலம். இதை நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் தென்கோடியில் பிறந்த ஆதிசங்கரர் வடகோடியில் உள்ள காஷ்மீரில் சிவன் கோயிலை கட்டினார். சங்கரதேவ் அஸ்ஸாமிலிருந்து ராமேசுவரம் வந்துள்ளார். சீக்கியகுரு குருநானக் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். ஆனால், இப்போது தெற்கு வடக்கு என்று பேசுகிறார்கள். நமது ஒற்றுமை வெவ்வேறு பெயர்களைக் கொண்ட பண்டிகைகளால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிரீதியிலான வேறுபாடும், வேற்றுமை உணர்வும் எழத் தொடங்கின. காஷ்மீரில் தீவிரவாதிகள், வடகிழக்கு பிராந்தியத்தில் பிரிவினைவாதிகள், நக்சலைட்கள் என ஆங்காங்கே வெவ்வேறு வடிவில் வன்முறைகள் ஏற்பட்டன. ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வன்முறைகளால் உயிரிழந்தனர். ஆனால் பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளில் வன்முறைகள் அடியோடு மறைந்தன.
காஷ்மீரிலும், வடகிழக்கு பிராந்தியத்திலும் அமைதி ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு கிடைத்த சரியான தலைமைதான் இந்த மாற்றங்களுக்கு எல்லாம் காரணம். 10 ஆண்டுக்கு முன்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியா இன்றைய உலக அளவில் 4-வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. விரைவில்3-வது இடத்தை எட்டிவிடுவோம். 2047-ம் ஆண்டு முற்றிலும் வளர்ந்த இந்தியாவாக மாறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஆளுநர் பேசினார். முன்னதாக, கலை, கலாச்சாரம், கல்வி, மருத்துவம், அரசுப் பணி, பாதுகாப்புப் பணி உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி ஆளுநர் கவரவித்தார்.