மற்ற நாட்களில் போட்டியாளர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும். ஆனால் இந்த விசாரணை நாளில் விஜய்சேதுபதியின் குரல் மட்டுமே கேட்டது. அவர் கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
ஏறத்தாழ அனைவருமே வாங்கிக் கட்டிக் கொள்ளும்போது விதிவிலக்கு ஆச்சரியமாக பாராட்டைப் பெற்றவர் வியன்னா மட்டுமே.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 27
“ஏன் போட்டியாளர்கள் இப்படி மோசமா நடந்துக்கறாங்க?” – இதுதான் பெரும்பான்மையான பார்வையாளர்களின் எரிச்சலுடன் கூடிய கேள்வி. இந்த நோக்கில்தான் நானும் கூட விமர்சனம் செய்திருக்கிறேன்.
ஆனால் மனச்சாட்சியோடு ஒன்றை யோசித்துப் பார்ப்போம். நம்மில் சிலரை தேர்ந்தெடுத்து பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே அனுப்பினாலும் ஷோ இப்படித்தான் இருக்கும். ஏனெனில் உலகம் வெளியேவும் அப்படித்தான் இருக்கிறது. அதுதான் வீட்டுக்குள்ளும் பிரதிபலிக்கிறது.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது ‘அடடா.. நாம் கூட இப்படிச் செய்திருக்கிறோமே.. இப்படியெல்லாம் நடந்திருக்கிறோமே.. இனிமேலாவது அப்படி நடக்கக்கூடாது என்கிற சுயபரிசீலனையை அடைவதுதான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால் ஏற்படும் அடிப்படையான நன்மை. மாறாக போட்டியாளர்களை மட்டும் காட்டமாக விமர்சிப்பது முறையல்ல.
போட்டியாளர்களை இப்படி விளாசும் விஜய் சேதுபதியாகட்டும், பிக் பாஸாகட்டும், அவர்களுக்கு இப்படி நடக்கும் என்று முன்பே தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். பாரு, திவாகர் போன்றவர்களைத் தோ்வுசெய்து அனுப்புவதே பிக் பாஸ் டீம்தானே? எனவே அவர்கள் எதிர்பார்ப்பதுதான் நடக்கிறது.
‘இவரே பாம் வைப்பாராம்.. அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற வசனம்போல இவர்களே அப்படியொரு சூழலை உருவாக்கி போட்டியாளர்களை அடித்துக்கொள்ள வைத்துவிட்டுப் பிறகு அவற்றை குத்திக்காட்டி ‘அப்படிப் போடு மாப்ள’ என்று நம்மை கைத்தட்டி மகிழ்ச்சிப்படுத்தி நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க வைக்கும் வணிகத் தந்திரத்தை திறம்பட செய்கிறார்கள்.
“கத்தாதீங்க.. கத்தாதீங்க.. “ – கத்திக் கத்தி அட்வைஸ் செய்த விசே
மேடைக்கு லவுட் ஸ்பீக்கருடன் வந்தார் விசே. “காதுல ரத்தம் வராததுதான் குறை. எதுக்கு கத்தறாங்கன்னே தெரியல. அவங்க பாஷைலயே பேசி புரிய வைக்கலாம்” என்றார். அவர் சொன்ன மாதிரியே வெள்ளிக்கிழமையில் ஒன்றும் நடக்கவில்லை. பாருவும் திவாகரும் வழக்கம் போல் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். “நாமினேஷன்னா பயப்படறாங்க பாரு” என்று அலட்டிக் கொண்டிருந்தார் திவாகர். “இனிமே நாம பிரெண்ட்ஸ் மட்டும்தான். லவ் கன்டென்ட் கூடாது. ஓகேவா?” என்று கம்ருதீனுடம் சிரித்து சிரித்து சமாதான ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தார் பாரு.
லவுட் ஸ்பீக்கருடன் வீட்டிற்குள் சென்ற விசே “எல்லோரும் நல்லாயிருக்கீங்களா.. கத்திக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கறது?” என்று ஹைடெஸிபலில் கத்த, ‘என்னடா இது ஆரம்பமே கண்ணைக் கட்டுது?’ என்கிற திகைப்புடன் போட்டியாளர்கள் அமர்ந்திருந்தார்கள்.

“என்னடா இது இப்படி கத்தறானேன்னு பார்க்கறீங்களா.. நீங்க பண்ணதும் அப்படித்தான் இருந்தது. கொஞ்ச நேரமே உங்களால தாங்க முடியலையே.. இத்தனை நாளா நீங்க கத்தினது எங்களுக்கு எப்படியிருக்கும். மத்த சீசன்லலாம் ரெண்டு வாரம் ஆனதுமே போட்டியாளர்கள் பிக்அப் ஆயிடுவாங்க. இந்த சீசன்ல வெறும் சண்டை மட்டும்தான் இருக்குது” என்று சலித்துக் கொண்டார்.
சத்தம் என்றாலே அதன் பிரதான குறியீடு பாருதானே? எனவே அவரை எழுப்பி ‘சொல்லுங்க பாரு’ என்று விசே ஆரம்பிக்க “அதாவது கருத்துசொல்ல விட மாட்றாங்க” என்று பாரு சொல்ல “நீங்க மத்தவங்களை சொல்ல விட்டிருக்கீங்களா?” என்று விசே கேட்டவுடன் முகம் இருண்டார் பாரு.
‘ரீல்ஸ் போடவா பிக் பாஸ் வந்தீங்க?” – வாட்டர் மெலனை பிழிந்தெடுத்த விசே
அடுத்ததாக திவாகர் பக்கம் வண்டியைத் திருப்பியவர், “எப்ப பாத்தாலும் தமிழக மக்களேன்னு பேசி ரீல்ஸ் போடறீங்க. வெளியே அதைத்தானே பண்ணிட்டு இருந்தீங்க.. உள்ள வந்தும் அதையே பண்றீங்க. இது உங்க சொந்த வீடு இல்ல. நீங்க அதுக்கு வரலை. மத்தவங்க சொல்றதையும் கேக்க மாட்றீங்க. வாய் வேலை செய்யற மாதிரி காதும் வேலை செய்யணும்” என்று எகிற, கவுண்டமணியைப் பார்த்த செந்தில் போல பம்மினார் திவாகர். “அது என்ன தராதரம்.. அதுக்கு ஏதாவது மீட்டர் வெச்சிருக்கீங்களா?” என்று அடுத்த சாட்டையை விசே சுழற்ற சபையில் பலத்த கைத்தட்டல் கேட்டது.
அடுத்த சூடு எஃப்ஜேவிற்கு. திவாகர் அர்ச்சனை வாங்கும்போது சிரித்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது அர்ச்சனை. “நீங்க மட்டும் என்ன பண்ணீங்க.. அதென்ன நாக்அவுட் பண்ணிட்டு வெளியே போவேன்னு மிரட்டறீங்க.. இப்பவே கூட போயிடலாம்” என்ற விசே அடுத்ததாக கலையை நோக்கி “நீங்க பேசறதுக்கு பீப் சவுண்டு போட்டே பிக் பாஸ் டீம் ஓய்ஞ்சு போயிட்டாங்க. அத்தனை கெட்ட வார்த்தை” என்று சொல்ல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நின்றார் கலையரசன். “எங்கேயோ போய் ஞானமெல்லாம் கிடைச்சுச்சுன்னீங்க. இதுதானா அது? இப்படி கெட்ட வார்த்தை பேசறது ஒரு பெருமையா?” என்று காட்டமான வார்த்தைகளைத் தொடர்ந்த அடுத்த ரவுண்டு வருவதற்காக பிரேக்கில் கிளம்பினார்.

எப்படியும் நம்ம கிட்ட தான் வருவார் என்று எதிர்பார்த்த பாரு “இனிமே எந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு அவர் கிட்ட பேசறது. இனிமே கன்ட்ரோல்லா இருக்கணும்” என்று திவாகரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “அவர் சொல்றது பேசாம இருக்கணும்னு அர்த்தமில்ல. கத்தக்கூடாதுன்னு சொல்றார்” என்று பொழிப்புரை தந்து கொண்டிருந்தார் கனி.
“உங்க பாசத்தையெல்லாம் வெளில வெச்சுக்கங்க” – காட்டமாக அட்வைஸ் செய்த விசே
பிரேக் முடிந்து வந்த விசே, மறுபடியும் கலையைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினார். “அவ்ளோ.. சொல்லிட்டுப் போறேன்.. அப்பக் கூட நீங்க செஞ்ச தப்புக்கு வருந்தினது போல தெரியல. சிரிச்சிட்டு உக்காந்திருக்கீங்க” என்று பாய்ந்த விசே, அடுத்ததாக கனியை நோக்கி “இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காத. ரொம்பவும் யோசிக்காதன்னு ரம்யா கிட்ட சொல்றீங்க. அவங்க யோசிக்கட்டும்னுதானே இதையெல்லாம் சொல்றது.. நீங்க ரொம்ப நல்லவங்களாவே இருங்க. வெளில சிலை வைக்கறோம். ஆனா சக போட்டியாளர்களை pamper பண்ணாதீங்க. உங்க அன்பையெல்லாம் வெளில வெச்சுக்கங்க. அன்பை வெச்சுகூட ஒருத்தரை பழிவாங்கலாம்” என்கிற மாதிரி பேச வாயடைத்துப்போய் அமர்ந்தார் கனி.

அடுத்ததாக பாருவின் பக்கம் திரும்பிய விசே “ஒவ்வொரு வாரமும் சொல்றேன். ஆனா மறுபடி மறுபடி அதையேதான் பண்றீங்க.. உங்களுக்கு ஷார்ப் மைண்ட் இருக்கு. அதை வேஸ்ட் பண்ணாதீங்க. உங்களுக்கு எதிரா வேலை செய்யற ஆள் யாருன்னா.. அது நீங்களேதான்” என்று சொல்ல சங்கடமும் சிரிப்புமாக தலையசைத்தார் பாரு.
அடுத்து மாட்டியவர் பிரவீன். “சட்டை போடாம ரீல்ஸ் போடறீங்களேன்னு திவாகரை கேட்டேன். என்னை அவர் சட்டை பண்ணவேயில்ல. இது குழந்தைகள் பார்க்கற நிகழ்ச்சி…” என்று பிரவீன் இழுக்க “ஏன்.. வேற யாரும் சட்டை போடாம இருந்ததேயில்லையா.. அவர் ரீல்ஸ் போடறதை ஏன் பின்னாடி நின்னு கிண்டல் பண்றீங்க?” என்று சாத்தி விட்டு “வினோத்.. நீங்கதான் இருபது வருஷம் ஃபேமஸ் ஆச்சே.. அதுக்கேத்த மெச்சூரிட்டி இருந்திருக்கணும்ல” என்று அங்கும் ஊமைக்குத்து தொடர்ந்தது.
“நண்பனா இருந்தா ஒரு நியாயம்.. மத்தவனுக்கு ஒரு நியாயமா?”
அடுத்து மாட்டியவர் கனி. “சட்டை போடாததற்கு திவாகரை கேள்வி கேட்டீங்க. ஏன் எஃப்ஜே சட்டை போடாம இல்லையா.. கம்ருதீன் சட்டை போடாம சுத்தலையா” என்று விசே கேட்க எதையோ சொல்லி சமாளித்தார் கனி. “எல்லோரையும் சமமா நடத்துங்க” என்ற விசே மீண்டும் திவாகரைப் பிடித்து “இதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?” என்று திவாகர் சொன்ன வில்லங்கமான கமென்ட்டை கண்டித்தார்.
“நண்பனா இருந்தா பொறுத்துக்கறீங்க.. வேண்டாவதனா இருந்தா கண்டிக்கறீங்க.. என்ன நியாயம் இதெல்லாம். பிக் பாஸ் கூப்பிட்டா உடனே போகாம அப்பவும் ரீல்ஸ் போடறீங்க.. என்ன இதெல்லாம்?” என்று திவாகரைக் கேட்க “இல்ல சார். முப்பது செகண்டுதான் இருந்தது.. அதான்” என்று அவர் இழுக்க “ஓ.. ரீல்ஸ் போடத்தான் இங்க வந்தீங்களா.. அதான் நாள் முழுக்க டைம் இருக்கே.. பிக் பாஸ் கூப்பிடறப்ப போறதுக்கு என்ன கேடு?” என்கிற மாதிரி சாட்டையை விசே சுழற்ற முகம் வெளிறி அமர்ந்தார் திவாகர்.

“உங்களைச் சொல்லிட்டு.. எங்களையே இப்படி கத்த வைக்கறீங்க” என்று நொந்து கொண்ட விசே ‘ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு வரேன்” என்று சலித்தபடியே பிரேக்கில் சென்றார். “எனக்கு ஷார்ப் மைண்டுன்னு விசே பாராட்டிட்டாரு” என்று சந்தோஷமடைந்தார் பாரு. (அதை சரியா யூஸ் பண்ணலைன்றதுதான் பிரச்சினை!)
விசேவிடம் பாராட்டு வாங்கிய வியன்னா – திட்டு வாங்காமல் தப்பித்த கம்ருதீன்
பிரேக் முடிந்து வந்த விசே, இந்த முறை துஷார் – அரோரா ஜோடியை ஒரு பிடி பிடித்தார். “இங்க ஏஸி வசதில்லாம் சரியா இருக்கா.. சொல்லுங்க.. ஏதாவது குறை இருந்தா சரி செஞ்சிடலாம்” என்று சர்காஸம் பேசிய விசே “மக்களே.. உங்க ஆட்கள் ரெண்டு பேரைத்தான் உள்ளே வெச்சிருக்கோம்” என்று அவர்கள் ஒன்றுமே செய்யாமல் இருப்பதை நையாண்டியாக குத்திக் காட்டினார்.
“கம்மு. இந்த வாரம் உங்க மேலே பெரிய கம்ப்ளெயிண்ட் இல்ல. ஆனா இங்க கரூப்பிஸம் இருக்கு” என்ற விசே, வியன்னாவை எழுப்பி கம்முவைப் பற்றி சொல்லச் சொல்ல “நல்ல பிளேயர். ஒழுங்கா ஆடினா கடைசி வரைக்கும் வரலாம்” என்று சரோஜா தேவி மொழியில் வியன்னா சொல்ல “ம்..பார்த்துக்கங்க.. வியன்னா.. உங்களை பாராட்டறேன். உங்க கருத்தை ஸ்ட்ராங்கா சொல்றீங்க.. தனியா நின்னு ஆடறீங்க” என்று விசே பாராட்ட அகம் மகிழ்ந்து ‘தாங்க்யூ அங்கிள்’ என்கிற மாதிரி புன்னகையுடன் அமர்ந்தார் வியன்னா.

அடுத்தது ரம்யாவின் டர்ன். “திவாகரும் கலையும் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறான்னு சொன்னீங்க. அதை பிக் பாஸே ஒத்துக்கலை. ஏன்னு யோசிச்சீங்களா. ஒரு குடும்பமா ஆயிட்டிங்களா.. பாருவிற்கே தைரியம் சொன்ன ஆளாச்சே.. இப்பவாவது தைரியமா சொல்லுங்க. அந்த ரெண்டு பேர் யாரு?” என்று விசே கேட்க “எஃப்ஜே , வினோத்” என்றார் ரம்யா.
“வன்முறை என்பது கோழைகளின் ஆயுதம்” என்று பன்ச் வசனம் பேசிய விசே “நண்பனா இருந்தாலும் அவன் தவறை சுட்டிக் காட்டுவதுதான் உண்மையான நட்பு. அதை சரியாப் புரிஞ்சுக்கறவன்தான் உண்மையான நண்பன். இது உங்களுக்குப் புரியுதா?” என்று பிரேக்கில் சென்றார். “நான் யாருக்கும் பயப்படாமத்தான் ஆடினேன்” என்று முனகினார் எஃப்ஜே.
பிரேக் முடிந்து வந்து பார்வையாளர்களிடம் விசே பேசும் போது “இந்த அன்பு கேங் எப்பத்தான் ஆட்டத்தை ஆரம்பிப்பாங்க” என்று ஒருவர் கேட்க “அதை உள்ளேயே கேட்ருவோம். வாங்க” என்று வீட்டுக்குள் சென்றார் விசே.
அன்பு கேங்கை கதற வைத்த விசே
“நியாயம் கேட்க ஒண்ணு சேர்றது தப்பு இல்ல. ஆனா அது க்ருப்பிஸமா ஆனாத்தான் தப்பு. அக்கா, தங்கச்சின்னு கூப்பிட ஆரம்பிச்சாலே அது பிரச்சினைதான். குடும்பத்துக்குள்ள எப்படி காயப்படுத்தறதுன்னு சேஃப் கேம் ஆடினா.. நிறைய பேர் வெளியே போயிட்டப்புறம், குடும்பத்துக்குள்ளேயே நாமினேட் செஞ்சுதானே ஆகணும்.. ஆனா அதுக்குள்ள கேம் செத்துப் போயிடுமே.. யார் பார்ப்பாங்க.” என்று வெடித்த விசே “அதென்ன பிக் பாஸை ட்யூட்ன்னு சொல்றது.. அவரை பிக் பாஸ்ன்னு மட்டும்தான் சொல்லணும்..” என்று கறாராக அட்வைஸ் செய்தவர் “திவாகர் சொன்ன கமென்ட்டை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மறுபடியும் பாய்ந்தார்.
“உறவு வெச்சு ஆடினா, அது உங்க ஆட்டத்தை பலவீனமாக்கிடும். ஒரே ஆளை இத்தனை பேரா நாமினேட் பண்ணுவீங்க.. ஓகே.. இன்னைக்கே எவிக்ஷன் வெச்சுக்கலாம்” என்று அதிரடியாக சொனன விசே “ஆக்சுவலி.. ரெண்டு பேரை அனுப்பயிருக்கணும். ஆனா உங்க நல்ல நேரம்” என்றபடி எவிக்ஷன் கார்டை காட்ட அதில் கலையரசன் பெயர் இருந்தது.

“ரெண்டு எவிக்ஷன்னு சொன்னவுடனே நான் செமயா பயந்துட்டேன்..” என்று குஷியானார் பாரு. “நான் உன்னை நாமினேட் பண்ணலை. வெளியே போய் பார்த்துக்கோ” என்று கம்ருதீனிடம் சொல்லி கோபமாக விலகினார் அராரோ. (விசே எத்தனை சொல்லியும் மறுபடியும் சேஃப் கேம். அரோரா நாமினேட் செய்திருந்தாலும் அதில் தவறில்லை என்பது கம்முவிற்குப் புரிய வேண்டும்!)
“பிரவீன் நல்ல நண்பன். கனி எனக்கு இன்னொரு அம்மா மாதிரி இருந்தாங்க” என்று விடை பெற்ற கலை, “என்னோட குருநாதர் பாரு” என்றது ஹைலைட். “பாருக்குள்ள ஒரு குழந்தை இருக்காங்க” என்று சேர்த்துக் கொண்டார். மேடைக்கு வந்த கலையை ‘நாட்டுப்புறக்கலையை வளர்க்கப் பாருங்க.. கெட்ட வார்த்தைகளை இல்ல” என்று அட்வைஸ் செய்து வழியனுப்பினார் விசே.
மீண்டும் வீட்டுக்குள் வந்த விசே, “மத்தவங்களை பயமுறுத்தறா மாதிரி பேசாதீங்க.. நடந்துக்காதீங்க.. பயமுறுத்தறது பயத்துல இருந்துதான் வருது” என்றபடி விடைபெற்றார்.
அடுத்த எபிசோடில் வைல்ட் கார்ட் என்ட்ரி இருப்பதால் இன்றே எவிக்ஷனை வைத்து விட்டார்கள் போல. புதிய என்ட்ரிகள் வந்த பிறகாவது ஆட்டம் களை கட்டுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.