கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஜோதிபிரியோ மல்லிக். முன்னாள் மந்திரியான இவர் ஹப்ரா தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். சால்ட் லேக் பகுதியில் இவருடைய வீடு அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இவருடைய வீட்டுக்குள் சென்றுள்ளார். அவர் திடீரென மல்லிக்கை கடுமையாக தாக்கியுள்ளார்.
அவருடைய அடி வயிற்றில் கைகளால் குத்தி, தாக்கியதில் மல்லிக் சரிந்து விழுந்துள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு பாதுகாப்பு அதிகாரி மற்றும் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இளைஞரை பிடித்து கொண்டனர். அவரை பிதன்நகர் போலீசாரிடம் பின்னர் ஒப்படைத்தனர். விசாரணையில், அவருடைய பெயர் அபிஷேக் தாஸ் என தெரிய வந்தது.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஹப்ரா பகுதியை சேர்ந்த அந்நபர், வேலை தொடர்பாக மல்லிக்கை சந்தித்து பேச விரும்பியிருக்கிறார். ஆனால், அவரை சந்தித்ததும் திடீரென தாக்குதல் நடத்தியிருக்கிறார். எனினும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி மல்லிக் கூறும்போது, அவரை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. குடிபோதையில் இருந்தாரா? என்பது சரியாக தெரியவில்லை. மற்ற நபர்களை போன்று தன்னை சந்திக்க வந்தவர் என்றே நினைத்தேன். ஆனால், திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்து விட்டேன் என கூறியுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறை மந்திரியாக மல்லிக் இருந்தபோது, ஊழல் வழக்கு ஒன்றில் அவரை மத்திய விசாரணை அமைப்புகள் கைது செய்திருந்தன. இதனை தொடர்ந்து, அவருடைய பதவி பறிக்கப்பட்டது.