சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நடைமுறைப்படுத்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவ.2-ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது என இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இன்று உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.-ஐ நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எஸ்ஐஆரை நடைமுறைப்படுத்த உகந்த காலம் இதுவல்ல என்றும், தேர்தல் ஆணையத்துக்கு இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசிலமைப்புச் சட்டம் தந்த அதிகாரங்களை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதாவும், தகுதி உள்ளவர்கள் நீக்கப்படுவதற்கும், தகுதியற்றோர் சேர்க்கப்படுவதற்கும் ஏதுவான வகையில் இந்த நடைமுறை அமைந்துள்ளதாகவும், இந்த எஸ்ஐஆரை நடைமுறைபடுத்தினால், லட்சக்கணக்கான தமிழ்நாடு வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்படும் போன்ற முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டி இம்மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு வருகிற நவம்பர் 6 அல்லது 7-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.