லிமா,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், ‘ஹாலோவீன்’ சீசன் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தலைநகர் லிமாவில் உள்ள சாண்டியாகோ டி சர்கோ(Santiago De Surco) என்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றவாளிகளை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக, போலீஸ் அதிகாரி ஒருவர் ‘ஸ்பைடர்மேன்’ வேடத்துடன் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
‘ஹாலோவீன்’ சமயத்தில் அங்கு இதுபோல் மாறுவேடங்கள் அணிந்து கொண்டாட்டங்களில் ஈடுபவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், போலீசார் நடத்திய இந்த நூதன தேடுதல் வேட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ‘கொக்கைன்’ (Cocaine) போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.