மதுரை: வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி, அந்த இயக்கம் செய்த பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியில் பொது மக்களுக்கு வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”கடந்த 35 ஆண்டு காலமாக மாவட்ட தலைவர் தொடங்கி முக்கிய தலைமை பொறுப்புகளை முழு சுதந்திரத்துடன் செயல்படுவதால் எனக்கு எந்த குறையுமில்லை. அதிமுக – பாஜக கூட்டணியில் திமுக ஆட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுமா என்பதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
கர்நாடகாவில் எந்த ஒரு தனிக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழகத்தில் இன்றைய சூழலில் திமுக அரசு ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறது. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் போதைப் பொருட்கள் இல்லாத தமிழகமாக இருந்தது. அரசு இன்று வரையிலும் ஒரு கிராம் சிந்தடிக் டிரக்ஸ் பிடித்துள்ளீர்களா? ஏனென்றால் அதை திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் தான் விநியோகம் செய்தார்.
திட்டமிட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர் போன்ற குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளை ‘டார்கெட்’ செய்து போதைப் பொருட்களை விற்பனை செய்கின்றனர். அடுத்த தலைமுறையை அழிக்கும் தீய சக்தியாக ஸ்டாலின் அரசு உள்ளது. கூட்டணியை விட மக்களின் தீர்ப்பே முக்கியம் வாய்ந்தது. வாட்ஸ்-அப்பில் பத்து ரூபாய் நோட்டு அனுப்பி ரூ.30 அல்லது 40 லட்சம் அரசு வேலைக்காக லஞ்சம் பெறுவது விஞ்ஞான ஊழலாக உள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதா வெற்றி பெறும்போது, 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருக்கின்றனர் என, நீதிமன்றம் வரை ஸ்டாலின் சென்றார். நல்ல ரோஷமுள்ள முதல்வராக இருந்தால், வட மாநில பெண்களை தவறாக பேசிய துரைமுருகனை அமைச்சர் பதிவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்” என்று ஹெச்.ராஜா கூறினார்.