சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்தாவிட்டால் தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் பிஹாரில் இப்பணி நடைபெற்றது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி கடந்த 28-ம் தேதி தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி நாளை (நவ.4) தொடங்க உள்ளது.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கும் வகையில், திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விசிக, மதிமுக உட்பட 49 கட்சிகள் பங்கேற்றன.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) நாட்டின் பல்வேறு கட்சிகள் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் கைப்பாவையாக, எதேச்சதிகாரப் போக்குடன் தேர்தல் ஆணையம் செயல்படுவதை இந்த கூட்டம் கண்டிக்கிறது.
சிறுபான்மையினர் வாக்குகள்: சிறுபான்மையினரின் வாக்குகள், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு, தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும்சதித் திட்டத்தோடு பிஹாரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் மன்றத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ தேர்தல் ஆணையம் எந்த பதிலும் கூறவில்லை.
பிஹாரில் நடந்த குளறுபடிகளை சரிசெய்யாமல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் திட்டத்தை செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையை பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்பதாகவும் உள்ளது. பிஹாரில் நடந்த எஸ்ஐஆர் பணி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தமிழகத்தில் இந்த பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியதை ஏற்க முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 169-ன்படி மத்திய அரசிதழில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, அதன் மூலமாகவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட வேண்டும். மாறாக,தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக அறிவிப்பது, அரசியல் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சரிபார்ப்பில் நேர்மை, வெளிப்படைத்தன்மை இல்லை. ‘ஆதார் சில நிபந்தனைகளுடன் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்படும்’ என்கிறது ஆணையம். இதன்மூலம், உண்மையான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க திட்டமிடுவதாக தெரிகிறது. ஒரு வாக்காளர் ஆவணம் வழங்க வேண்டுமா, வேண்டாமா? யாரிடம் வழங்குவது? என்ற எந்த அடிப்படை கேள்விகளுக்கு பதில் இல்லை.
சரியான காலம் அல்ல: கணக்கெடுப்பு காலம் என நிச்சயிக்கப்பட்டுள்ள நவ.4 முதல் டிச.4 வரையிலான காலம் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலம். எனவே, பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் உள்ளது. வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளை கையாள்வதில் ஈடுபட வேண்டும். எனவே, இது கணக்கெடுப்புக்கு உகந்த காலம் இல்லை.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் திருநாள் உள்ளன. இதனால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளர்களோ, சேர விரும்பும் வாக்காளர்களோ மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்வது ஏற்கக்கூடியது அல்ல. இதை தேர்தல் ஆணையம் இப்போது கைவிட வேண்டும். ஆணைய அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்ச நீதிமன்றவழிகாட்டுதலை வெளிப்படையாக கடைபிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, எந்த கட்சிக்கும் சார்பற்ற நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்.
தேர்தல் ஆணையம் இந்த கருத்துகளை ஏற்காததால், தமிழகத்தில் வாக்காளர்கள் அனைவரது வாக்குரிமையையும் நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழிஇல்லை. தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற தமிழகத்தில்உள்ள அரசியல் கட்சிகள் சார்பில்உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பங்கேற்றது 49; புறக்கணிப்பு 11: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக சார்பில் 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.திமுக நிர்வாகிகள் குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றன. திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கி.வீரமணி (திராவிடர் கழகம்), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக), மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்), கமல்ஹாசன் (மநீம), காதர் மொகிதீன் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜவாஹிருல்லா (மமக), தமிமுன் அன்சாரி (மஜக), பார்த்தசாரதி (தேமுதிக), வசீகரன் (ஆம்ஆத்மி),கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) உட்பட 49 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக மற்றும் பாமகவில் அன்புமணி தரப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. தவெக, நாதக, ராமதாஸ் தரப்பு பாமக உள்ளிட்ட 11 கட்சிகளை அழைத்தும் பங்கேற்கவில்லை.