பாட்னா: பிஹாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நவம்பர் 6-ல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்தச் சூழலில், வாக்காளர்களை கவரும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று போஜ்பூர் மற்றும் கயாவில் தேர்தல் பிரச்சாரங்களில் உரையாற்றுகிறார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வைஷாலி, பாட்னா, சஹர்சா மற்றும் முங்கர் மாவட்டங்களில் நடக்கும் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றுவார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தர்பங்கா, கிழக்கு சம்பாரண் மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 4) பிஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெண் தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறார். பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில், “பிஹாரில் பெண்கள் சக்தி சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக – தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக அசாதாரண ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களின் பங்கேற்பு பிஹாரில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று மகா கூட்டணியின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கயா மற்றும் ஔரங்காபாத்தில் பிரச்சாரம் செய்வார்கள். மகாகட்பந்தனின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், சமஸ்திபூர், பெகுசராய், சஹர்சா, தர்பங்கா, முசாபர்பூர் மற்றும் வைஷாலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் 17 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றுகிறார். அதேபோல மகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கயாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.