திருவிடைமருதூர்: தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், திருவிடைமருதூர் வட்டம், 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவால். 2-வது பெரிய கட்சியான அதிமுக, பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆக இருக்கும்.
தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது ஆனால் வளராது. ஜிஎஸ்டி வரி குறைத்து விட்டதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு வாக்கு வங்கி இருப்பதால் சப்பாத்திக்கு குறைத்து விட்டார்கள். இட்லிக்கு 5 சதவீதம் வரி போடுகிறார்கள். மீனவர் எல்லைப் பிரச்சினை கைது நடவடிக்கை தொடர்கிறது. வல்லரசாக தங்களை பறைசாற்றிக் கொள்பவர்கள் அத்துமீறும் முயற்சியை தடுக்காமல் இருப்பதால் அவர்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
நடிகர் விஜய் தவெக தலைவராக மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். எடுத்த எடுப்பிலேயே பெரிய கூட்டத்தை ஈர்க்கும் தலைவராகியுள்ளார் எம்ஜிஆரை விட விஜய்க்கு அதிக கூட்டம் கூடுகிறது. அவர் வாகை சூடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கரூரில் நடந்த சம்பவத்தால், கட்சியில் கட்டுப்பாடு, கடமை உடையவர்களின் வழிகாட்டல் இருந்தால் தொண்டர்களை முறையாக வழிநடத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்வார் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் எப்போதும் நடப்பது தான். தற்போது மீடியா வெளிச்சம் இருப்பதால் பிரகாசமாய் தெரிகிறது. குற்றச் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். நாகரிக உலகமாக நம்மை நாம் காட்டிக் கொள்ளும் போது இதில் கோவை சம்பவம் போன்றவைகள் ஏற்படாமல் தடுப்பது அவசியம். முதல்வர் ஸ்டாலின் இதில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்
நீங்கள் தவெகவில் சேர்ந்து வழிகாட்ட வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனக்கு களங்கம் வராமல் இருக்க முயற்சிக்கிறேன். சமய சொற்பொழிவிற்கு வந்ததால் ருத்ராட்ச மாலை அணிவித்தார்கள், அணிந்து கொண்டுள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.