தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை இசையை உருவாக்கி விட்ட அனிருத், இப்போது பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். ஷாருக்கானின் ‘ஜவான்’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரின் ‘கிங்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழிலும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ விஜய்யின் ‘ஜன நாயகன்’, சிலம்பரசனின் ‘அரசன்’ என டாப் ஹீரோக்களின் படங்களில் பிஸியாக உள்ளார்.
அனிருத்தின் இசைப் பயணத்தில் இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் ரஜினியின் ‘கூலி’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’, பாலிவுட்டின் ‘The Ba***ds of Bollywood’ என கலக்கியிருக்கிறார். அடுத்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு இசையமைக்கிறார்.

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியாகும் ‘எல்.ஐ.கே’, டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது என ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர். இதனால் படத்தின் பின்னணி இசைக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னரே நிறைவடைந்துவிட்டன. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் சீறிப்பாய்கின்றன. இன்னொரு பக்கம் முதல் சிங்கிளை வெளியிடும் முயற்சிகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். தமிழில் ‘DC’, ‘ஜெயிலர் 2’, ‘அரசன்’ ஆகிய படங்களின் பாடல் கம்போஸிங்கும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
‘ராக்கி’, ‘சாணிகாயிதம்’ படங்களின் இயக்குநரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘DC’ படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், மர்டர் என கலந்துகட்டும் ஜானராக உருவாகிறது. லோகேஷின் ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார்.

ரஜினி- நெல்சன் – அனிருத் கூட்டணியின் ‘ஜெயிலர் 2’, படத்திற்கு 4 பாடல்கள் கொடுத்துவிட்டார் என்ற பேச்சு இருக்கிறது. இந்தப் படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் தான் ரிலீஸ் ஆகிறது. கோவை, கேரளா, கோவா ஆகிய படப்பிடிப்புகளை தொடர்ந்து அடுத்த ஷெட்யூல் சென்னையில் தான் நடக்கிறது. சிலம்பரசன், வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தின் புரொமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து படத்திற்கான பாடல்களை உருவாக்கி வருகிறார் அனி. வழக்கம்போல நிசப்தமான இரவில் தான் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்தியில் ஷாரூக்கானின் ‘கிங்’ படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து நடந்து வருகின்றன. சித்தார்த் ஆனந்த் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு தான் வெளியாகிறது. இந்த படத்தின் பாடல்களும் ரெடியாகிவிட்டன.

தெலுங்கில் ‘கிங்டம்’ படத்தை இயக்கிய கௌதம் தின்னனூரியின் இயக்கத்தில் ‘மேஜிக்’ என்ற படமும், நானியின் நடிப்பில் ‘தி பாரடைஸ்’ படமும் அடுத்தாண்டு தான் ரிலிஸ் ஆகிறது. இந்த படத்திற்கான பாடல்களையும் கொடுத்துவிட்டார் அனிருத். இதில் ‘மேஜிக்’ படம் எப்போதோ ரெடியாகிவிட்டது.
இதற்கிடையே சில மியூசிக் கான்சர்ட்களுக்கான திட்டமிடல்களும் நடந்து வருகின்றன என்கிறார்கள்.